

ராஜபாளையம்: ராஜபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக வாகைக்குளம் பட்டியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. தெற்குவெங்கா நல்லூரில் தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 4 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இங்கு 82 மி.மீ. மழையளவு பதிவானது.
சத்திரப்பட்டி வாகைக்குளம் கண்மாயிலிருந்து அதிகளவிலான உபரிநீர் வெளியேறியதால், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வாகைக்குளம்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியில் 3 தெருக்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தவும், இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி பொதுமக்கள் சத்திரப்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
ராஜபாளையம் அருகே தெற்குவெங்காநல்லூர் பகுதியில் பாலப் பணிகள் நடப்பதால், போக்குவரத்து வசதிக்காக தற்காலிக தரைப்பாலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக பெரியகுளம் கண்மாயில் இருந்து அதிகளவிலான உபரிநீர் வெளியேறி, தற்காலிக பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் நக்கனேரி, பட்டியூர், சிதம்பராபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் மக்கள் 10 கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.