

மானாமதுரை: மானாமதுரையில் அரசு பேருந்தில் திடீரென படிக்கட்டு உடைந்து விழுந்தது. படிக்கட்டில் பயணித்த மாணவர்கள் கம்பியை பிடித்து கொண்டதால் கீழே விழாமல் தப்பினர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிவகங்கைக்கு நேற்று முன்தினம் காலை அரசு பேருந்து சென்றது.
இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பயணித்தனர். இடநெருக்கடியால் மாணவர்கள் படிக்கட்டில் பயணித் தனர். மானாமதுரை மேம்பாலம் ரயில்வே கேட் அருகே பேருந்து வந்தபோது, திடீரென பின்புற படிக்கட்டு உடைந்து விழுந்தது. அப்போது அதில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் உடனே பேருந்து கம்பியை பிடித்துக் கொண்டனர்.
இதனால் காயமின்றி தப்பினர். பின்னர் பேருந்தில் இருந்து மாணவர்கள் இறக்கிவிடப்பட்டு, வேறு பேருந்து மூலம் சிவகங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் இதுபோன்ற ஓட்டை, உடைசல் பேருந்தை இயக்குவதை அரசு போக்குவரத்துக் கழகம் நிறுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.