Published : 06 Jan 2024 06:29 AM
Last Updated : 06 Jan 2024 06:29 AM
நாகர்கோவில்: குமரியில் சூறைக்காற்றால் கடந்த 5 நாட்களாக கடலுக்கு செல்ல முடியாமல் மீன்பிடி தொழில் முடங்கியுள்ளது. உள்ளூர் தேவைக்கு கூட மீன்கள் கிடைக் காமல் தட்டுப்பாடு நிலவுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக மீனவர்கள் கடந்த 20-ம் தேதியில் இருந்தே ஊர் திரும்பினர். இதனால் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டினம், சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகங்களில் 1,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பண்டிகை முடிந்து வழக்கமாக ஜனவரி 2-ம் தேதியில் இருந்து மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வது வழக்கம்.
ஆனால் குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சூறைக்காற்று பலமாக வீசி வருகிறது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான குமரி கடல் பகுதிகளில் கடும் கடல் சீற்றம் நிலவுகிறது. இதனால், ‘மறு அறிவிப்பு வரும் வரை ஆழ்கடலுக்கு மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்’ என, மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக வள்ளம், பைபர் படகுகள் உட்பட நாட்டுப் படகுகளில் மட்டும் குறைந்த அளவு மீனவர்கள் கரைப்பகுதிகளில் மீன்பிடித்து வருகின்றனர். குளச்சல் உட்பட அனைத்து துறைமுகங்களிலும் விசைப்படகுகளில் ஐஸ்கட்டி, தண்ணீர் உட்பட மீன்பிடி உபகரணங்களை ஏற்றிவைத்து, கடலுக்கு செல்ல மீனவர்கள் தயார் நிலையில் இருந்தனர்.
ஆனால் சூறைக்காற்றால் மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. கடலுக்கு செல்ல விசைப்படகு மீனவர்கள் நேற்றும் முயன்ற போது, அதிவேக காற்று வீசியது. இதனால் கடந்த 5 நாட்களாக விசைப்படகுகள் கடலுக்கு செல்ல முடியாமல் மீனவர்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
வருகிற திங்கட்கிழமைக்குள் மீன்பிடிக்க செல்வதற்கான அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் உள்ளனர். இதுபோல், கரைமடி பகுதியில் குறைந்த அளவு நாட்டுப்படகுகளே மீன் பிடித்தன. இதன் காரணமாக ஒட்டு மொத்தமாக மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு மீனவர்கள் வருவாய் இழந்துள்ளனர்.
மீன்கள் மிகவும் குறைந்த அளவில் மட்டும் தற்போது கிடைத்து வருவதால், குமரி மாவட்டத்தில் உள்ளூர் மக்களின் தேவைக்கு கூட மீன்கள் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. விசைப்படகுகள் பண்டிகைக்காக துறைமுகங்களுக்கு வந்த நிலையில் கடந்த 20-ம் தேதியில் இருந்து இதுவரை 17 நாட்களாக கடலுக்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT