Published : 05 Jan 2024 05:47 AM
Last Updated : 05 Jan 2024 05:47 AM

3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் போலீஸாரை பணியிட மாற்றம் செய்ய டிஜிபி உத்தரவு

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் போலீஸாரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நாடாளுமன்ற தேர்தலை வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டு ஆலோசித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் போலீஸாரை பணியிட மாற்றம் செய்யும்படி அனைத்து மாநில காவல் துறைக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழக காவல்துறை சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர்ஜிவால் சுற்றறிக்கை ஒன்றை அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் அனுப்பி உள்ளார். அதில், கூறப்பட்டிருப்பதாவது:

தமிழக காவல் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்தால் அவர்களை பணியிடமாற்றம் செய்ய வேண்டும். அனைத்து பிரிவு போலீஸாரும் அவர்களது சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்தால், வேறு மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும். இதற்கானபட்டியலை காவல் ஆணையர்கள், சரக டிஐஜிக்கள், மண்டல ஐஜிக்கள் தயாரிக்க வேண்டும்.

சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய 3 காவல் ஆணையரகங்களும் தங்களுக்குள் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கொள்ள வேண்டும். இந்த பணியிட மாற்றத்துக்கு கணினிமயமாக்கல் பிரிவு, சிறப்பு பிரிவுகள் ஆகியவை மட்டும் விதிவிலக்காகும். அதேபோல காவல்துறையின் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் இந்த பணியிட மாற்றத்துக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள்.

பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ள போலீஸார் இந்த பணியிட மாற்ற பட்டியலில் இடம் பெற மாட்டார்கள். அதேபோல அவர்களுக்கு தேர்தல் பணியும் வழங்கப்பட மாட்டாது. கடந்ததேர்தல்களில் புகார்களில் சிக்கிய, குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது.மேலும் பணி நீட்டிப்பு பெற்றவர்களையும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்.

பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டிய போலீஸார் பட்டியலை தயாரித்து ஜனவரி 10-ம் தேதிக்குள் தமிழக காவல்துறையின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x