Published : 05 Jan 2024 05:01 AM
Last Updated : 05 Jan 2024 05:01 AM

வெள்ள நிவாரணத்தை உடனே வழங்க கோரி அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்ட தமிழக எம்.பி.க்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை: தமிழக அரசு கேட்டுள்ள வெள்ள நிவாரணத் தொகை ரூ.37,907.19 கோடியை உடனடியாக ஒதுக்க வலியுறுத்தும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க அனைத்து கட்சி எம்பி.க்கள் நேரம் கோரியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கடந்த டிச.3, 4-ம் தேதிகளில் ‘மிக்ஜாம்’ புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, பொதுமக்களுக்கு வாழ்வாதார பாதிப்புகள் ஏற்பட்டன. அதேபோல், டிச.17, 18-ம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப்பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டன.

இந்த 2 மிகப்பெரிய இயற்கை பேரிடர்களுக்கும் மத்திய அரசிடம் இருந்து நிவாரணத் தொகையாக தமிழக அரசு மொத்தம் ரூ.37,907.19 கோடியை ஏற்கெனவே கோரியுள்ளது. இது, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கான மறுகட்டமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ரூ.19,692.67 கோடியும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான மறுகட்டமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ரூ.18,214.52 கோடியும் உள்ளடக்கியதாகும்.

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் கடந்த டிச.12,13-ம் தேதிகளில் பார்வையிட்டனர். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிச.7-ம் தேதி மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்து, உரிய நிவாரணத் தொகையை வழங்குவதாக உறுதிஅளித்திருந்தார்.

அதேபோல், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை மத்தியக் குழுவினர் டிச.20-ம் தேதி பார்வையிட்டனர். தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டிச.26-ம் தேதி தூத்துக்குடி சென்று வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்தார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி, திருச்சியில் ஜன.2-ம் தேதி நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசும்போது, தமிழகத்தில் ஏற்பட்ட புயல், வெள்ளப் பாதிப்புகள் தொடர்பாகக் குறிப்பிட்டு, சேதங்கள் குறித்த தனது வருத்தத்தையும், வேதனையையும் பதிவு செய்திருந்தார்.

நிவாரணம் பெறப்படவில்லை: ஆனால் இதுவரை மத்திய அரசிடம் இருந்து எந்தவொரு நிவாரணத் தொகையும் பெறப்படவில்லை. இதுபோன்ற இயற்கைப் பேரிடர்கள் மற்ற மாநிலங்களில் ஏற்பட்டபோது, குறுகிய காலத்துக்குள் மத்திய அரசு தேசிய பேரிடர் நிதியிலிருந்து நிவாரணத் தொகையை வழங்கிஉள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மாநில மக்களின் நலனில் அக்கறை கொண்டு, 2 பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் தற்காலிக சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, தமிழக அரசு இதுவரை ரூ.2,100 கோடி செலவழித்துள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த இயற்கைப் பேரிடர்களினால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள் போன்ற சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும், உதவிகளை வழங்கும் வகையில் ரூ.1000 கோடி மதிப்பிலான வாழ்வாதார மறுகட்டமைப்புத் திட்டத்தையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இவை அனைத்தையும் கருத்தில்கொண்டு, தமிழக அரசு கோரியுள்ளரூ.37,907.19 கோடியை உடனடியாக வழங்க வலியுறுத்தி, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கோரியுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x