Published : 05 Jan 2024 05:23 AM
Last Updated : 05 Jan 2024 05:23 AM

அடுக்குமாடி குடியிருப்புக்கான கூட்டு வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்து அறிவிப்பு: கட்டணங்களை குறைக்க கட்டுமான நிறுவனங்கள் கோரிக்கை

கோப்புப் படம்

சென்னை: அடுக்குமாடி குடியிருப்புக்கான கூட்டு வழிகாட்டு மதிப்பு, தமிழகத்தில் 3 லட்சம் சாலை மற்றும் தெருக்களுக்கு நிர்ணயம் செய்து பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் தொடர்பான பத்திரப்பதிவில் புதிய நடைமுறை கடந்த டிச.1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதன்படி, பிரிக்கப்படாத பகுதி மற்றும் கட்டிடத்தின் விலை அடிப்படையில் கூட்டு மதிப்பு நிர்ணயப்படி பதிவு செய்ய வேண்டும்.

இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையால், கூட்டு மதிப்பு தொடர்பான சுற்றறிக்கையை திரும்பப் பெற்ற பதிவுத்துறை, புதிய நெறிமுறைகளை வகுத்தது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கூட்டு மதிப்பு அந்தந்த மண்டலத்தின் துணை பதிவுத்துறை தலைவர்களால் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு நிர்ணயிக்கும்போது, பொதுமக்களிடம் மேற்கொள்ளப்படும் களஆய்வு விசாரணையில், கட்டுமான நிறுவனங்கள் செய்யும் விளம்பரம் மூலமாகவும் கண்டறியப்பட்டு நிர்ணயிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கிராமத்தைப் பொறுத்தும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கூட்டு மதிப்பு, ஒவ்வொரு தெரு, சர்வே எண்களின் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

அவ்வாறு நிர்ணயிக்கும்போது, புல எண் அல்லது தெருக்களுக்கு அவற்றின் சாதக, பாதக அம்சங்கள், வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் புல எண் அல்லது தெரு வாரியாக கூட்டு மதிப்பு நிர்ணயிக்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பின் ‘கார்பெட் ஏரியா’ உள்ளிட்ட அனைத்து ‘சேலபிள் ஏரியா’வைக் கருத்தில்கொண்டு சூப்பர் பில்ட்அப் ஏரியாவுக்கு கூட்டு மதிப்பு கணக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.

இணை பதிவாளர்கள் ஆய்வு: இதையடுத்து, தற்போது, அந்தந்த மண்டல இணை பதிவாளர்கள், தங்கள் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அடுக்குமாடி பதிவுக்கான கூட்டு வழிகாட்டி மதிப்பை நிர்ணயித்து வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, ஒவ்வொரு பகுதியிலும் தெரு, சாலை வாரியாக கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, சவுகார்பேட்டையில் ஒரு சதுரடி ரூ.12 ஆயிரம், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ரூ.7 ஆயிரம், அம்பத்தூர் எம்டிஎச் சாலையில் ரூ.9 ஆயிரம், முகப்பேர் - அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் ரூ.11 ஆயிரம், ஐயப்பன்தாங்கல் - மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ரூ.10 ஆயிரம், மேற்கு சிஐடி நகர் 4-வது பிரதான சாலை ரூ.14 ஆயிரம், மணப்பாக்கம் - பிரதான சாலை ரூ.10 ஆயிரம், பள்ளிக்கரணை ஐஐடி காலனி- ரூ.7 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், சைதாப்பேட்டை - கோடம்பாக்கம் சாலை ரூ.8 ஆயிரம், திருவான்மியூர் - பெசன்ட் நகர் 2-வது அவென்யூ - ரூ.15 ஆயிரம், இந்திராநகர் 3-வது பிரதான சாலை ரூ.14 ஆயிரம், கலாசேத்ரா ரோடு - ரூ.12 ஆயிரம், எல்.பி.சாலை ரூ.14 ஆயிரம், சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை ரூ.9 ஆயிரம் என கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தி.நகரைப் பொறுத்தவரை அதிகபட்சமாக ஜி.என் செட்டி சாலையில் ரூ.19,500, வடக்கு போக் சாலையில் ரூ.18 ஆயிரம், பர்கிட் சாலையில் ரூ.16 ஆயிரம், நாதமுனி தெருவில் ரூ.14 ஆயிரம், மாம்பலம் ஸ்டேஷன் சாலையில் ரூ.11 ஆயிரம், நந்தம்பாக்கம் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் காலனி - ரூ.10 ஆயிரம், நங்கநல்லூர்- கூட்டுறவு சங்க காலனி - ரூ.7,500, உள்ளகரம் பகுதி - ரூ.6 ஆயிரம், அடையாறு - அண்ணா சாலை ரூ.14 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆற்றுப்பகுதி சாலை - ரூ.12 ஆயிரம், போரூர் - மவுண்ட் பூந்தமல்லி சாலை ரூ.8 ஆயிரம், விருகம்பாக்கம் ஆற்காடு சாலை - ரூ.10,500, சாலிகிராமம் ரூ.10 ஆயிரம், வளசரவாக்கத்தில் பெரும்பாலான பகுதிகள் ரூ.7 ஆயிரம், மடிப்பாக்கம் - கார்த்திகேயபுரம், ராம்நகர் ரூ.6 ஆயிரம், வேளச்சேரி உதயம் காலனி உள்ளிட்ட பகுதிகள் ரூ.7,500 என ஒரு சதுரடிக்கு கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தேனாம்பேட்டை பகுதியில் அடையாறு போட் கிளப் சாலை, 1, 2, 3 அவென்யூக்கள், பின்னி சாலை, கஸ்தூரி எஸ்டேட், கஸ்தூரி ரங்கா சாலை, போயஸ் கார்டன், பகுதியில் அதிகபட்சமாக ரூ.28,500, ஆழ்வார்ப்பேட்டை - ரூ.10 ஆயிரம், அண்ணா சாலையில் நந்தனம் முதல் ஜெமினி மேம்பாலம் வரை ரூ.20 ஆயிரம், ஆர்ச் பிஷப் அவென்யூ - ரூ.25 ஆயிரம், கதீட்ரல் சாலை ரூ.16 ஆயிரம், கிரெசன்ட் தெரு - ரூ.25 ஆயிரம் என அடுக்குமாடி கட்டிட பதிவுக்கான கூட்டு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுமான நிறுவனங்கள் தரப்பில், பதிவு மற்றும் முத்திரைத் தீர்வை கட்டணத்தில் கூடுதல் சலுகை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கட்டுமான நிறுவனத்தினர்.. இதுகுறித்து கிரெடாய் அமைப்பினர் கூறியதாவது: தேசிய அளவில், பல மாநிலங்களில் கூட்டு மதிப்பு அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்புகள் பதிவு செய்யப்படுகின்றன. எனவே, அதில் மாற்றம் கோரவில்லை. ஆனால், தற்போது பதிவுக் கட்டணம், முத்திரைத் தீர்வை கட்டணம் என்பது ரூ.50 லட்சம் வரை 6 சதவீதம், ரூ.50 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை 7 சதவீதம், ரூ.3 கோடிக்கு மேல் 9 சதவீதம் என உள்ளது.

இதை, ரூ.50 லட்சத்துக்கு குறைவாக இருந்தால் 4 சதவீதமாகவும், ரூ.50 லட்சத்துக்கும் மேல் 5 சதவீதம் என்றும் நிர்ணயிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x