சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த சுற்றறிக்கை ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த சுற்றறிக்கை ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: கடந்தாண்டு ஏப்.1-ம் தேதி முதல் சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை பலமடங்கு உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்ய பத்திரப்பதிவுத்துறை தலைவர் தலைமையில் மதிப்பீட்டுக்குழு உள்ளது. 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், சொத்துகளின் விலை அதிகரித்துள்ளதால் வழிகாட்டி மதிப்பீட்டை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், மதிப்பீட்டுக்குழு வழிகாட்டி மதிப்பீட்டை நிர்ணயம் செய்ய அவகாசம் எடுத்துக்கொள்ளும் என்பதால், தற்காலிக நடவடிக்கையாக 2017 ஜூன் 8 வரை அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில் புதிய மதிப்பீடு நிர்ணயிக்கப்படும் எனவும் அரசு அறிவித்து இருந்தது.

அதன்படி தமிழகத்தில் சொத்துகளுக்கான புதிய வழிகாட்டி மதிப்பீடு 2023 ஏப்.1 முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு கடந்த மார்ச் 30-ல் சுற்றறிக்கை பிறப்பித்தது.

வழிகாட்டி மதிப்பை அதிகரித்து தமிழக அரசு பிறப்பித்த இந்த சுற்றறிக்கையை எதிர்த்து இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பான கிரெடாய் மற்றும் 3 கட்டுமான நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

அதில், சட்ட விதிகளின்படி இதுதொடர்பாக எந்தவொரு கலந்தாலோசனையும் நடத்தாமல், பொதுமக்களின் கருத்துகளையும் கோராமல் தமிழக அரசு தன்னிச்சையாக வழிகாட்டி மதிப்பை பல மடங்கு அதிகரித்து இருப்பது சட்டவிரோதமானது. 50 சதவீதம் வரை வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்தியிருப்பது என்பது தற்காலிகமான ஏற்பாடாகத் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் பிறப்பித்துள்ள உத்தரவில், சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை திருத்தி அமைக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சட்ட விதிகளின்படி துணைக்குழுக்களை அமைத்து, அறிக்கைகள் பெற்று, அவற்றை ஆய்வுசெய்து, பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டு அதன்பிறகே வழிகாட்டி மதிப்பீட்டை நிர்ணயிக்க முடியும். உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் வழிகாட்டி மதிப்பீட்டை அதிகரித்து கடந்தாண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை, இயற்கை நீதியை மீறும் செயல் என்பதால் அந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்படுகிறது. உரிய விதிகளைப் பின்பற்றி புதிதாக வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க வேண்டும். அதுவரை 2017-ல் அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பீட்டை பின்பற்றவேண்டும் என உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in