Published : 05 Jan 2024 05:33 AM
Last Updated : 05 Jan 2024 05:33 AM

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தேதி அறிவிப்பு: சாதிப் பெயரை சொல்லி காளைகளை அவிழ்க்க தடை

மதுரை: மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மதுரை அவனியாபுரத்தில் வரும் 15-ம் தேதியும், பாலமேட்டில் 16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் என்று மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மதுரை மாவட்டஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆண்டுதோறும் தைத்திங்களில் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டும் அவனியாபுரத்தில் உள்ள திடலில் வரும் 15-ம்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

பாலமேடு பேரூராட்சிக்கு உட்பட்ட மஞ்சமலை ஆற்றுத் திடலில் வரும் 16-ம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டும், அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டைமுனிவாசல் மந்தைத் திடலில் வரும் 17-ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் நடைபெற உள்ளன.

மேலும், ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பாரம்பரியமாக நடைபெறும் அந்தந்த இடங்களிலேயே, இந்த ஆண்டும் சிறப்பான முறையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பதிவு குறித்து சம்பந்தப்பட்டதுறை மூலமாக விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவு: ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்துவிடும்போது, சாதிப்பெயரை சொல்லி காளைகளை அவிழ்த்துவிடக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மானகிரியைச் சேர்ந்த செல்வகுமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. ஜல்லிக்கட்டு போட்டியை சாதி மற்றும் மத ரீதியாக நடத்தக் கூடாது, காளை உரிமையாளர்களின் பெயர்களுடன் சாதிப் பெயரை தெரிவிக்கக் கூடாது என்று 2019-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சாதிப் பெயர்களுடன் காளைகள் அவிழ்க்கப்பட்டன. இது உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. எனவே, இந்த ஆண்டுஜல்லிக்கட்டில் காளை உரிமையாளர்களின் பெயர்களுடன் அவர்களின் சாதிப் பெயரை அறிவிக்கக் கூடாது என்றும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் தீண்டாமை ஒழிப்புஉறுதிமொழியை ஏற்கவேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “மனுதாரர் கோரிக்கை தொடர்பாக, உயர் நீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்படும்” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், “சாதிபெயர்களைச் சொல்லி காளைகளை அவிழ்த்துவிடக்கூடாது. இதுதொடர்பான நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற வேண்டும். ஜல்லிக்கட்டில் தீண்டாமை உறுதிமொழி எடுப்பது தொடர்பான மனுவைப் பரிசீலித்து, உரிய முடிவெடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x