தாம்பரம் சானடோரியத்தில் ரூ.18 கோடியில் மகளிர் விடுதி: முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்

தாம்பரம் சானடோரியத்தில் ரூ.18 கோடியில் மகளிர் விடுதி: முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்
Updated on
1 min read

சென்னை: தாம்பரம் சானடோரியத்தில் ரூ.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பணிபுரியும் மகளிர் விடுதி கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பணி நிமித்தமாக பெண்கள் தங்களது வீட்டை விட்டு வெளியில் தங்க வேண்டிய சூழ்நிலையில், அவர்களுக்கு குறைந்த வாடகையில், பணிபுரியும் இடத்துக்கு அருகில் தரமான, பாதுகாப்பான தங்கும் விடுதிகள் அவசிய தேவையாக உள்ளது.

பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளின் தேவைகளை உணர்ந்த தமிழக அரசு, பொருளாதார ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர்களுக்கான பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதிகளை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அமைத்து வருகிறது. இதற்காக “தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்” உருவாக்கப்பட்டு, புதிய விடுதிகளை கட்டுதல், பழைய விடுதிகளை புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மகளிர் விடுதிகளின் தேவை கருதி, செங்கல்பட்டு மாவட்டம் – கூடுவாஞ்சேரி, திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் 226 மகளிர் தங்கும் வகையில் 2 புதிய பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள், சென்னை - அடையாறு, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், வேலூர், திருநெல்வேலி, பெரம்பலூர் ஆகிய இடங்களில் 458 மகளிர் தங்கும் வகையில் புதுப்பிக்கப்பட்ட 7 விடுதிக் கட்டிடங்களை கடந்தாண்டு ஜூலை 13-ம் தேதி முதல்வர்ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில் தாம்பரம் சானடோரியம் பகுதியில், ரூ.18 கோடி செலவில் 461 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டிடத்தை நேற்று முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கீதா ஜீவன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, சமூகநலத் துறை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, ஆணையர் வே.அமுதவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in