Published : 05 Jan 2024 06:20 AM
Last Updated : 05 Jan 2024 06:20 AM

அரிசி ஆலை மின் கட்டணத்தை குறைக்க கோரிக்கை

சென்னை: அரிசி ஆலைகளுக்கான மின்கட்டணத்தை குறைக்க வேண்டும்என்று அரிசி ஆலை உரிமையாளர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் கூட்டமைப்பு மற்றும் நெல், அரிசி டீலர் சங்க செயலாளர் ஏ.சி.மோகன் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2022-ம் ஆண்டு மோட்டா ரக நெல் விலை 100 கிலோவுக்கு ரூ.2 ஆயிரத்து 40 என நிர்ணயிக்கப்பட்டது. இதை மத்திய அரசுகடந்த ஆண்டு ரூ.2 ஆயிரத்து 183 ஆகவும், தமிழக அரசு ரூ.2ஆயிரத்து 265 ஆகவும் உயர்த்தின.

சன்னரக நெல்லுக்கு, ரூ.2,060-லிருந்து மத்திய அரசு ரூ.2,203 ஆகவும், தமிழக அரசு ரூ.2,310 எனவும்குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்தன. அரிசி விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணம். உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அரிசியின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பாஸ்மதி அல்லாத உயர் ரக பொன்னி,பாபட்லா, சோனா மசூரி ஆகிய ரகங்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில், கடந்த ஜூலை மாதம் சன்னரக பச்சை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. செப்டம்பரில் சன்ன ரக புழுங்கல் அரிசிக்கு ஏற்றுமதி வரியை 20 சதவீதம் உயர்த்தியது. இதனால் உயர் ரக சன்ன அரிசி தட்டுப்பாடு இன்றி கிடைக்கிறது. மின் வாரியம் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் குறைந்த மின் திறன் தொழிற்சாலைகளுக்கு ஒரு கேவி-க்கு மின் கட்டணம் மாதம் ரூ.35 என இருந்ததை ரூ.150ஆக உயர்த்தியுள்ளது.

உயர்மின்திறன் கொண்ட தொழிற்சாலைகளுக்கு ஒரு கேவி-க்கு ரூ.350என இருந்ததை ரூ.550 ஆக உயர்த்தியது. இதை கடந்த ஆண்டு ஜூலை முதல், முறையே ரூ.153, ரூ.562 என உயர்த்தியது. இது அரிசி ஆலைகளுக்கும் பொருந்தும். அரிசி ஆலைகள் அத்தியாவசிய உணவுப் பொருள் தயாரிப்பவை. வேளாண் சார்ந்த, பருவம் சார்ந்த தொழில் என்பதால், இத்தகைய மின் கட்டணத்தை பழையபடி குறைத்து நிர்ணயிக்க வேண்டும்.

மத்திய அரசு முதலில் பிராண்டட் அரிசிக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்தது. இப்போது 25 கிலோ மற்றும் அதற்கு கீழ் பையில் விற்பனை செய்தால் 5 சதவீதம் ஜிஎஸ்டிவரி விதித்துள்ளது. சாமானிய மக்கள் வாங்கும் 25 கிலோவுக்கும் குறைவான அரிசிக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x