Published : 05 Jan 2024 06:15 AM
Last Updated : 05 Jan 2024 06:15 AM
சென்னை: சொத்துவரி பெயர் மாற்றத்துக்கான கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கும் வரை சொத்து வரி உயர்த்தப்படாது என்று வாக்குறுதி அளித்த திமுக, கரோனா தொற்று இன்று வரை இருக்கும் நிலையில், ஓராண்டுக்கு முன்பே சொத்து வரியை உயர்த்தியது. இதனால் வீட்டு உரிமையாளர்களும், வாடகைக்கு குடியிருப்போரும் பெருத்த பாதிப்புக்கு உள்ளாயினர்.
இந்தப் பாதிப்பிலிருந்து மீள்வதற்குள், சொத்து வரி பெயர் மாற்றக் கட்டண உயர்வை அறிவிக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு திமுக அரசு உத்தரவிட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
அதாவது, சொத்து வரி பெயர் மாற்றத்துக்கு இதுவரை நிர்ணயிக்கப்பட்டு இருந்த ரூ.1500 வரையிலான நிலைக் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட உள்ளது. அதன்படி, சொத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் வரை என்றால் ரூ.1,000 என்றும், ரூ.10 லட்சம் வரைஎன்றால் ரூ.3 ஆயிரம், ரூ.20 லட்சம் வரை என்றால் ரூ.5 ஆயிரம், ரூ.50 லட்சம் வரை என்றால் ரூ.10 ஆயிரம், ரூ.1 கோடி வரை என்றால் ரூ,20 ஆயிரம், அதற்கு மேல் ஒவ்வொரு கோடிக்கும் ரூ.20 ஆயிரம் செலுத்த வேண்டும். திமுக அரசின் இந்தநடவடிக்கை வழிப்பறிக் கொள்ளைக்குச் சமம். இது கடும் கண்டனத்துக்குரியது.
இதில் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு சொத்து வரி பெயர் மாற்றக் கட்டண உயர்வு குறித்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT