

சென்னை: சூரியசக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த உள்ளதாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார். சென்னை ஐஐடி ஆய்வு பூங்கா மற்றும் இந்திய ஆற்றல் சேமிப்பு அமைப்பு சார்பில் தேசிய அளவிலான எரிசக்தி திருவிழா2 நாட்கள் நடத்தப்படவுள்ளன. இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை தரமணியில் உள்ள ஐஐடி பூங்கா வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் ஐஐடி ஆய்வு பூங்காவின் தலைவர் அசோக் ஜுன்ஜுன்வாலா, இந்திய அணுசக்தி ஆணைய முன்னாள் தலைவர் அனில் ககோட்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின், ஒட்டுமொத்த பரவலாக்கப்பட்ட வளர்ச்சிக்கு தேவையான, அனைத்து நிறுவனங்களையும் தேர்வு செய்கிறோம். தற்போது சூரியசக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் நாம் அதிக கவனம் செலுத்தஉள்ளோம்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வளர்ச்சி, நிலைத்தன்மையை முன்வைத்துதான் பணிகள் மேற்கொள்ளப்படும். ஜப்பான் நாட்டில் நிலநடுக்க பாதிப்பு ஏற்பட்ட சூழலிலும் அங்கிருந்தும் முதலீட்டாளர்கள் வரவுள்ளனர். எனவே, முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பாக நடைபெறும்.
தஞ்சாவூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் தனிப்பட்ட முறையிலும் வலியுறுத்தி இருக்கிறார். நிச்சயமாக அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு, விரைவில் விமான நிலையம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.