Published : 05 Jan 2024 04:04 AM
Last Updated : 05 Jan 2024 04:04 AM
விழுப்புரம்: நகர்ப் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.6.74 கோடி மதிப்பில் செஞ்சியில் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இப்பேருந்து நிலையத்தின் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.
கட்சி விழாவானது அரசு விழா: விழா மேடையில், தற்போது மக்கள் பிரதிநிதியாக இல்லாத முன்னாள் எம்எல்ஏக்கள், திமுக, காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் அமர வைக்கப்பட்டனர். இதன் மூலம் இந்நிகழ்வு அரசு விழாவா? அல்லது திமுக நிகழ்ச்சியா ? என்ற கேள்வி எழுந்தது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேருந்து நிலையத்தை திறந்து வைத்து, முதல் பேருந்து போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக நடைபெற்ற விழாவில் இத்தொகுதி எம்எல்ஏவான அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் பேசியதாவது: நான் முதல் முறையாக 1986-ம் ஆண்டு செஞ்சி பேரூராட்சி தலைவராக பெறுப்பேற்ற போது, நகரில் குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லாத நகரமாக இருந்தது. அதன் பின் திமுக ஆட்சியில் திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றில் 54 கி.மீ. துாரத்தில் இருந்து, அப்போது 6 கோடி ரூபாய் செலவில் செஞ்சி – அனந்தபுரம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.
பின்னர் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது செஞ்சிக்கு என தனி குடிநீர் திட்டம் அறிவித்து, ரூ.16 கோடி ஒதுக்கி எல்லோருக்கும் குடிநீர் வழங்கினார். இப்போது அமைச்சர் நேரு ரூ.33 கோடி ஒதுக்கி அனைத்து வீடுகளுக்கும் தனித்தனியாக குடிநீர் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்துள்ளார். செஞ்சியில் சக்கராபுரம் பழயை காலனி, புதிய காலனி, சிறு கடம்பூர் காலனியில் சமுதாய கூடம் கட்டவும், செஞ்சியில் அறிவுசார் மையம் அமைக்கவும், செஞ்சி கோட்டை ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்லும் சாலையை தார்சாலையாக அமைக்கவும், மேல்களவாய் ரோட்டில் சங்கரா பரணி ஆற்றில் மேம்பாலம் கட்டுவதற்கு ஏதுவாக பேரூராட்சியிடம் உள்ள 1,600 மீட்டர் சாலையை நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கவும் அமைச்சர் நேரு அனுமதி அளிக்க வேண்டும். இதை செஞ்சி நகர மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அமைச்சர் நேரு பேசுகையில், “முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் ரூ.1,933 கோடி மதிப்பிலான கட்டிடங்களை நாளை (இன்று) திறந்து வைக்கிறார். மேலும் எங்கள் துறைக்கு முதல்வர் ரூ. 24 ஆயிரம் கோடி கொடுத்துள்ளார். பேரூராட்சி நிர்வாகத்துக்காக ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு நிலைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் 490 பேரூராட்சிகளில் 31 பேரூராட்சிகளில் புதிய கட்டிடங்கள் கட்ட ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 51 பேரூராட்சிகளில் வாரச் சந்தை அமைக்க ரூ. 110.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. 13 பேரூராட்சிகளில் ரூ.20.44கோடியில் அறிவு சார் மையம்அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கிட 3 ஆண்டுகளில் ரூ. 30 கோடிநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் செஞ்சி பேரூராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ. 53.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின் படி நகர்ப் புறங்களில் 45 சதவீத மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது இது 60 சதவீதமாக உயர்ந்துள்ளது” என்று தெரிவித்தார்.
இந்த திறப்பு விழாவில் தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, ஆரணி எம்.பி டாக்டர் விஷ்ணு பிரசாத், பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண்குரலா, ஒன்றியக் குழுத் தலைவர் விஜயகுமார், கண்மணி நெடுஞ்செழியன், அமுதா ரவிகுமார், யோகேஸ்வரி மணிமாறன், செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியர் அலி மஸ்தான், செயல் அலுவலர் செந்தில் குமார், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் செந்தமிழ் செல்வன், சேது நாதன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT