86 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.25 அடியாக சரிவு
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 86 நாட்களுக்குப் பிறகு மீண்டும் 71.25 அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பொய்யததாலும், கர்நாடக அரசு மாதந்திர நீர் பங்கீட்டை வழங்காததாலும், நீர்வரத்து குறைந்து, டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது கடந்த அக்டோபர் மாதம் 10-ம் தேதி நிறுத்தப்பட்டது.
அப்போது, அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 163 கன அடியாகவும், நீர்மட்டம் 30.90 அடியாகவும் இருந்தது. காவிரி கரையாக மக்களின் குடிநீர் தேவைக்காக 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. பின்னர், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், சரிந்தும் காணப்பட்டது. கடந்த 28-ம் தேதி முதல் நீர்வரத்து ஆயிரம் கன அடிக்கு கீழ் சரிந்துள்ளது.
அதன்படி, அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 752 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 544 கன அடியாக சரிந்துள்ளது. அணையில் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 600 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்தை விட, நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் சரிந்தது. கடந்த 86 நாட்களுக்கு பிறகு, அணையின் நீர்மட்டம் 71.27 அடியில் இருந்து 71.25 அடியாக சரிந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 33.80 டிஎம்சியில் இருந்து 33.28 டிஎம்சியாக சரிந்துள்ளது.
