Published : 04 Jan 2024 06:46 AM
Last Updated : 04 Jan 2024 06:46 AM
கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீரசோழபுரம் கிராமம். கொள்ளிடக்கரையோரத்தில் இக்கிராமம் உள்ளது. இப்பகுதியில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இறப்பவர்களை கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் உள்ள சுடுகாட்டுக்கு கொண்டு சென்று, தகனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இறந்தவர்களின் உடலை, வடக்கு ராஜன் வாய்க்காலை கடந்தே எடுத்துச் செல்ல வேண்டும்.
இப்படிச் செல்லும் போது வடக்கு ராஜன் வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக வரும் தருணத்தில், இங்கு படத்தில் காணப்படுவதைப் போல நெஞ்சளவு ஆழத்தில் இறங்கி, தட்டுத்தடுமாறிதான் எடுத்துச் செல்ல வேண்டும். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க தங்கள் கிராமத்துக்கு நேரே வடக்கு ராஜன் வாய்க்காலில் பாலத்தை அமைத்து தரவேண்டும் என்று வீரசோழபுரம் கிராம மக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். ஆளும் ஆட்சியாயளர்களும், முன்பு ஆண்டவர்களும் பலமுறை இந்தப் பாலத்தை கட்டித் தருவதாக உறுதியளித்துள்ளனர். ஆனால், இதுவரையிலும் கட்டப்படவே இல்லை.
கடந்த வாரம் கூட, இக்கிராமத்தை சேர்ந்த ருக்குமணி என்ற 70 வயது மூதாட்டி உயிரிழக்க, வாய்க்காலில் இறங்கி மறுகரையில் உள்ள மயானத்துக்கு உடலை எடுத்துச் சென்று, அடக்கம் செய்தனர். “சமயங்களில், கட்டுக்கடங்காமல் தண்ணீர் வரும். அப்போது யாரேனும் இறந்து விடுவதுண்டு.
அந்த நேரத்தில் வாழைமரங்களை தோணியாக்கி, அதில் கயிறு கட்டி, ஒரு கரையில் இருந்து கயிறை விட, மறுகரையில் இருந்து சிலர் கயிறை இழுத்து ஒரு வழியாக உடலை இடுகாட்டுக்கு கொண்டு வருவோம்” என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர் வீரசோழபுரம் மக்கள்.
“சமயங்களில் கீழணைக்குச் சென்று நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கூறி, வடக்கு ராஜன் வாய்க்காலின் தண்ணீரின் அளவை குறைக்கச் செய்து அதன் பிறகு உடலை எடுத்துச் சென்று, வாய்க்காலை கடந்து சென்று அடக்கம் செய்வோம்” என்று இக்கிராம மக்கள் கூறும் போது, இங்கு உடனடியாக பாலம் கட்டப்பட வேண்டியதன் அவசர அவசியத்தை நம்மால் உணர முடிகிறது.
“வடக்கு ராஜன் வாய்க்காலில் பாலம் அமைக்க வேண்டும் என்று பலமுறை காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்து விட்டோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் இதில், தலையிட்டு பாலம் அமைத்து தரவேண்டும்” என்று வீரசோழபுரம் கிராமத்தினர் தெரிவிக் கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT