

நாகப்பட்டினம்: நாகையில் பாஜகவில் சேர `மிஸ்டு கால்' கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி நேற்று உத்தரவிட்டார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த 27-ம் தேதி ‘என் மண் என் மக்கள்’ நடைபயண பிரச்சாரம் மேற்கொள்ள நாகை வந்தார். அப்போது, நாகை பொது அலுவலக சாலையில் சாமியானா பந்தல் அமைத்து பாஜகவினர், கட்சி உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டிருந்தனர். கட்சியில் உறுப்பினராக சேர விரும்புவோரை அவர்களது செல்போனிலிருந்து பாஜகவினர் தெரிவிக்கும் செல்போன் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கச் செய்து, அவர்களை கட்சி உறுப்பினர்களாக சேர்ந்து வந்தனர்.
இந்நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வெளிப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர், தாங்கள் `மிஸ்டு கால்' கொடுத்து பாஜகவில் சேருவது எப்படி என்று விசாரித்துள்ளனர். அங்கிருந்தவர்கள் ஒரு செல்போன் எண்ணைக் கொடுத்து, அந்த எண்ணுக்கு `மிஸ்டு கால்' கொடுக்குமாறு கூறியுள்ளனர்.
அதன்படி, அவர்கள் இருவரும் தங்கள் செல்போனிலிருந்து அந்தஎண்ணுக்கு `மிஸ்டு கால்' கொடுத்துள்ளனர். இதை அங்கிருந்த சிலர்வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.
இதையறிந்த நாகை எஸ்.பி.ஹர்ஷ்சிங், ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகியோரிடம் விசாரணைநடத்தி, இதுகுறித்த விசாரணைஅறிக்கையை தஞ்சாவூர் சரகடிஐஜி அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தார். மேலும், இருவரையும் மாவட்ட ஆயுதப்படைப் பிரிவுக்குஇடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், எஸ்.பி. அறிக்கையின் அடிப்படையில், தஞ்சை சரக டிஐஜி அலுவலகத்தில் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகியோரிடம் நேற்று விசாரணை நடைபெற்றது. அதில், இருவரும் பணியின்போது தங்களது செல்போனில் இருந்து `மிஸ்டு கால்' கொடுத்து பாஜகவில் சேர்ந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோரை பணியிடை நீக்கம்செய்து தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன் நேற்று உத்தரவிட்டார்.