

கடலூர்: பண்ருட்டி அருகே உள்ள எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி அக்கிராம மக்கள் நேற்று உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது எஸ்.ஏரிப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள இரு தெருக்கள் சிறுவத்தூர் ஊராட்சியிலும், இரு தெருக்கள் சேமகோட்டை ஊராட்சியிலும் உள்ளது. இந்த குழப்பங்களால் இங்குள்ள மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் சரியாக கிடைப் பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘எஸ். ஏரிப்பாளையம் கிரா மத்தை தனி ஊராட்சியாக அறி விக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களவைத் தேர்தலை புறக் கணிக்கப் போகிறோம்’ என்று சில நாட்களுக்கு முன் இக்கிராம மக்கள் அறிவித் திருந்தனர்.
இதற்கிடையில், டிச. 31-ம் தேதி நள்ளிரவு முதல் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி இக்கிராம மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை கருப்புக் கொடியேந்தி ஊர்வலமாக சென்ற எஸ்.ஏரிப்பாளையம் கிராம மக்கள் பண்ருட்டி - மடப்பட்டு சாலை சேலம் மெயின் ரோட்டில் எஸ். ஏரிப்பாளையம் கேட் அருகில் சாலையின் இருபுறமும் பந்தல் அமைத்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இக்கிராமத்தினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த திடீர் உண்ணாவிரதம் குறித்து, தகவலறிந்த போலீஸார் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தி னர். ஜன. 8-ம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் இது தொடர்பாக கருத்து கேட்பு நடத்தப்படும். இக்கூட்டத்தில் கிராம முக்கியஸ்தர்கள் அவசியம் பங்கேற்க வேண்டும். இதில் உரிய தீர்வு காணப்படும் என அதிகாரிகள் அப்போது உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். அரசின் நலத் திட்டங்கள் சரியாக கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.