Published : 04 Jan 2024 04:06 AM
Last Updated : 04 Jan 2024 04:06 AM
தேவகோட்டை: தேவகோட்டையில் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோரை அக்கட்சியினர் விமர்சித்துப் பேசினர்.
சிவகங்கை மாவட்டத்தில் காங்கிரஸார் 2 கோஷ்டிகளாக உள்ளனர். இதில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்கள் ஓரணியாகவும், முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி ஆதரவாளர்கள் மற்றொரு அணியாகவும் உள்ளனர். கார்த்தி சிதம்பரம் மீண்டும் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட தயாராகி வருகிறார். இதற்காக பூத் கமிட்டி கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஏற்கெனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கே.ஆர்.ராமசாமி ஆதரவாளர்கள் மானகிரியில் போட்டி பூத் கமிட்டி கூட்டத்தை நடத்தினர். இதில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் புகைப்படங்கள் இடம்பெறவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த கார்த்தி சிதம்பரம் தரப்பினர் கட்சி மேலிடத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கே.ஆர்.ராமசாமி ஆதரவாளரான மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தியை மாற்றிவிட்டு, கார்த்தி சிதம்பரம் ஆதரவாளரான சஞ்சய் காந்தியை மாவட்டத் தலைவராக கட்சி மேலிடம் நியமித்தது.
இந்நிலையில், மத்திய அரசை கண்டித்து தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகே கே.ஆர்.ராமசாமி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் சத்திய மூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்துப் பேசினர். இதனால் கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT