Published : 04 Jan 2024 04:02 AM
Last Updated : 04 Jan 2024 04:02 AM

“தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுகவுக்கு மனமில்லை” - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

வேலூரில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசும் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்.

வேலூர்: தேர்தல் வாக்குறுதிகளை கூட நிறைவேற்ற மனமில்லாமல் திமுக விடியாத ஆட்சியை தந்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டினார்.

வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமமுகவின் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் செயல் வீரர்கள் மற்றும் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமை தாங்கினார்.

பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் டிடிவி.தினகரன் கூறும்போது, ‘‘நானும் ஓ.பி.எஸ்-ம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே இணைந்து பணியாற்றுவோம் என முடிவெடுத்துள்ளோம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒரு சில கட்சிகளுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறோம். அதெல்லாம் நல்ல படியாக முடிந்த பிறகு கூட்டணி குறித்து சொல்வது தான் அரசியல் கட்சிக்கு அழகாக இருக்கும். கூட்டணி முடிவான பிறகு முறையாக உங்களுக்கு சொல்கிறேன். எடப்பாடி பழனிச்சாமி பிதற்று வதற்கெல்லாம் பதில் சொல்லி நான் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

அம்மாவின் இயக்கத்தை கையகப்படுத்தி வைத்துள்ள சுய நலவாதிகள் மக்கள் மன்றத்திலே அவர்களின் தோல் உரிக்கப்படுகின்ற காலம் வெகு விரைவில் வரும். தமிழ்நாட்டு மக்கள் துரோகத்துக்கு என்றைக்கும் ஆதரவாக இருக்க மாட்டார்கள். துரோகம் செய்தவர்கள் அதற்கான பலனை அனுபவிக்கும் காலம் வரும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். மீண்டும் அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவதற்காகவும், தீயவர்களிடம் இருந்து அம்மாவின் இயக்கத்தை மீட்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அமமுக. இந்த கொள்கை, லட்சியத்தில் இருந்து என்றைக்கும் நாங்கள் பின்வாங்க மாட்டோம்.

எடப்பாடி பழனிச்சாமியுடன் சேர்ந்ததை தவறு என உணர்ந்துதான் ஓபிஎஸ் அங்கிருந்து வெளியேறி அம்மாவின் தொண்டர்களை காப்பாற்ற எங்களோடு இணைந்து போராடி கொண்டிருக்கிறார். ஆளுகின்ற கட்சி மக்கள் விரோத ஆட்சியை செய்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமியின் ஊழல் ஆட்சியினால் மக்கள் கோபப்பட்டு திமுகவுக்கு வாக்களித்தார்கள். விடியல் வரும் என நினைத்து ஆட்சியை கொடுத்தார்கள். ஆனால், இன்றைக்கு திமுக விடியாத ஆட்சியை தந்து கொண்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை கூட அவர்கள் நிறைவேற்ற மனம் இல்லாமல் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x