

மதுரை: அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான மருத்துவப்பரிசோதனை செய்து காளைகளுக்கு தகுதிச்சான்று வழங்கும் பணிகள் தொடங்கியது.
தமிழகத்தில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த போட்டிகளாக கருதப்படுகிறது. புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும். பொங்கல் பண்டிகை அன்று 15-ம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டும், மறுநாள் 16-ம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டும், 17-ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியும் நடக்கிறது.
இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக, கடந்த ஒரு ஆண்டு முழுவதும் காளைகளை அதன் உரிமையாளர்கள் பிரத்யேகமான முறையில் தயார் செய்து வருகின்றனர். தினமும் நடைப்பயிற்சி, வாடிவாசல் பயிற்சி, நீச்சல், மண்ணில் கொம்புகளை கொண்டு குத்தவிடுவது, கட்டிப்போட்டு காளைகளை அடக்குவது போன்ற பல்வேறு பயிற்சிகள் காளைகளுக்கு வழங்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டதால், இந்த போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதியான காளைகளுக்கு மருத்துவப்பரிசோதனை செய்து, அவற்றுக்கு தகுதிச்சான்று வழங்கும் பணிகள் இன்று முதல் தொடங்கியது.
மாவட்டம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் காளை உரிமையாளர்கள் தங்கள் காளைகளை அழைத்து சென்று மருத்துவப்பரிசோதனை செய்து தகுதிச்சான்று பெற்று வருகின்றனர். இந்த பரிசோதனையில் வயது, உயரம், நாட்டு மாடா அல்லது கலப்பின மாடா, கானை தடுப்பூசி போடப்பட்டுள்ளதா? என்று பரிசோதிக்கப்படுகிறது. இந்த தகுதிச்சான்றை வைத்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கால்நடை மருத்துவர் சிவக்குமார் கூறுகையில், “ஜல்லிக்கட்டில் பங்கேற்க காளைகள் 3 வயது முதல் 8 வயது வரை இருக்க வேண்டும். 132 செ.மீ. உயரத்திற்கு மேல் இருக்க வண்டும். மாடுபிடி வீரர்கள் பிடித்து காளைகளை நிலை நிறுத்துவதற்கு வசதியாக திமில் தெரிய வேண்டும். இந்த உயரத்துக்குக் கீழும், வயது குறைவாக இருக்கும் காளைகளுக்கும் கண்டிப்பாக உடல் தகுதிச்சான்று வழங்கப்படாது. அதனால், போட்டியில் பங்கேற்கும் தகுதியை இந்த காளைகள் இழந்துவிடும்.
காளைகளுக்கு மருத்துவப்பரிசோதனை செய்த தகுதிச்சான்று வழங்கும் பணிகள் முடிந்தபிறகு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ‘லிங்’ மற்றும் வெப்சைட் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்படும். காளை உரிமையாளர்கள், அந்த ‘லிங்’கை கிளிக் செய்து, அதற்கான விண்ணப்பத்தை நிரப்பி, கால்நடை மருத்தவர் வழங்கும் காளைக்கான தகுதிச்சான்றை அப்லோடு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் அந்த விண்ணப்பங்களை பரிசோதனை செய்து, அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போட்டிகளில் பங்கேற்பதற்கான டோக்கனை வழங்குவார்கள். காளை உரிமையாளர், எந்த போட்டியில் பங்கேற்க விரும்புகிறார்களோ அந்த போட்டிக்கான ‘லிங்கை’ ஒப்பன் செய்து விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். ஒரு காளை ஒரு விளையாட்டில் கலந்து கொள்ள முடியும் என்பதால் தங்கள் பங்கேற்கும் ஒரு போட்டிக்கு மட்டுமே காளை உரிமையாளர்கள் தங்கள் காளையை பதிவு செய்ய முடியும்” என்றார்.