

மதுரை: அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் 5,000 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய வகையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கை பொங்கல் பண்டிகையின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க ஏற்பாடுகள் நடக்கிறது.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு மிகவும் புகழ்பெற்ற இடமாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் திகழ்கிறது. 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டத்துக்குப் பின் நேரடியாக இப்போட்டியைக் காண தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து அலங்காநல்லூருக்கு பார்வையாளர்கள் வருவது அதிகரித்து வருகிறது. ஆனால், அவர்கள் அமர்ந்து போட்டியைப் பார்க்க அலங்காநல்லூரில் போதிய கேலரி வசதிகள் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் வெளியூர்களில் இருந்து வரும் பார்வையாளர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்வார்கள். அ
லங்காநல்லூர் வாடிவாசல் அருகே வெளிநாட்டினருக்காக நிரந்தரமாக கேலரி அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சுற்றலாத் துறை, அவர்களை வாகனங்களில் அலங்காநல்லூர் அழைத்து வந்து இந்தப் போட்டியை காண ஏற்பாடு செய்யும். இருப்பினும் வெளிநாட்டினர் இந்தப் போட்டியை முழுமையாகக் காண முடியாமல் ஏமாற்றமடைவர்.
அதனால், ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கென்று நிரந்தரமாக ஓர் அரங்கம் அமைக்கப்படும் என்று சட்டமன்றக் கூட்டத்தொடரில் விதி 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான கட்டுமானப் பணிகளை 2023-ம் ஆண்டு மார்ச் 18-ம் தேதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 66.8 ஏக்கரில் ரூ.44 கோடியில் ஒரே நேரத்தில் கிரிக்கெட் போட்டியை போல் 5 ஆயிரம் பேர் அமர்ந்து கண்டுகளிக்கும் வகையில் இந்த அரங்கம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்த அரங்கில் செய்யப்பட்டுள்ளன. தரைத்தளத்தில் வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்களுக்கான இடம், காளைகள் பரிசோதனைக் கூடம், முதலுதவிக் கூடம், பத்திரிகையாளர் கூடம், காளைகள் பதிவு செய்யும் இடம், அருங்காட்சியகம், பொருட்கள் பாதுகாப்பு அறைகள் இடம்பெற்றுள்ளன.
முதல் தளத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு அறைகள், உணவு அறை, தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் தளத்தில் பொருட்கள் வைப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டியைக் காண மக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக மதுரை மட்டுமில்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் மூன்று வழித்தடங்களில் புதிய தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில் அரண்மனை முகப்பு தோற்றம் போலவும் உட்புறத்தில் கிரிக்கெட் அரங்கம் போலவும் இந்த ஜல்லிக்கட்டு அரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
போட்டியைக் காண வரும் பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதையடுத்து வாடிவாசல், காளைகளைக் கட்ட தனி இடம், மருத்துவ முகாம் மற்றும் வீரர்கள் ஓய்வறை போன்றவைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கம் அமைப்பதால் அலங்காநல்லூரில் நடக்கும் பாரம்பரிய ஜல்லிக்கட்டு பாதிக்கப்படும் என அந்த ஊர் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனால், இந்த பிரம்மாண்ட அரங்கில் ஜல்லிக்கட்டு நடந்தாலும், பாரம்பரியமாக அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டி தடையின்றி நடக்கும் என்று தமிழக அரசு உறுதிபட கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த ஜல்லிக்கட்டு அரங்கம் பொங்கல் பண்டிகையின்போது ஏதாவது ஒரு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து ஜல்லிக்கட்டு அரங்கை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. அதற்காக அமைச்சர் பி.மூர்த்தி கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஜல்லிக்கட்டு அரங்கு கட்டுமானப் பணிகள் 95 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளன. விரைவில் பணிகள் முழுமையான நிறைவேற்றப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்க உள்ளார்” என்றார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் எஸ்.ரகுநாதன், செயற்பொறியாளர் வி.செந்தூர் அவர்கள், அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் கோ.ரேணுகா ஈஸ்வரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.