கட்சிகளுக்கு இணையாக ‘மாஸ்’ காட்டிய விஜய் மக்கள் இயக்கம் @ வேலுநாச்சியார் பிறந்தநாள் விழா

கட்சிகளுக்கு இணையாக ‘மாஸ்’ காட்டிய விஜய் மக்கள் இயக்கம் @ வேலுநாச்சியார் பிறந்தநாள் விழா
Updated on
1 min read

சிவகங்கை: சிவகங்கையில் நடைபெற்ற விடுதலை போராட்ட வீரர் வேலுநாச்சியார் பிறந்தநாள் விழாவில் திமுக, அதிமுக போன்ற அரசியல் கட்சியினருக்கு இணையாக விஜய் மக்கள் இயக்கத்தினர் 'மாஸ்' காட்டினர்.

நடிகர் விஜய் இதுவரை தான் அரசியலுக்கு வருவது குறித்து வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. எனினும், அவரது நடவடிக்கைகள் அனைத்தும் அரசியலை நோக்கியே உள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அவரது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியில் சில இடங்களை கைப்பற்றினர். சில மாதங்களுக்கு முன், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை அழைத்து விஜய் பரிசளித்தது, அடிக்கடி மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சந்திப்பது, மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்வது என ஈடுபட்டு வருகிறார். இது அவர் அரசியல் பிரவேசம் செய்ய போவதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் குழுவினர் மூலம் தமிழக அரசியல் நிலவரங்களையும் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. அவரது ரசிகர்களும் விஜய் அரசியலுக்கு வருகிறார் என்ற நம்பிக்கையில் மக்கள் நலப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பள்ளிக் குழந்தைகளுக்கு உதவுதல், ரத்ததான முகாம் நடத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில மாதங்களுக்கு முன், அம்பேத்கர் பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் அவரது சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்நிலையில், சிவகங்கையில் வேலுநாச்சியார் பிறந்தநாளில் விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் திமுக, அதிமுக போன்ற அரசியல் கட்சியினருக்கு இணையாக ஏராளமானோர் வேலுநாச்சியார் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மேலும், சாலைகளில் ஆங்காங்கே விளம்பர பேனர்களும் வைத்திருந்தனர். அரசியல் கட்சியினர் போன்று விஜய் மக்கள் இயக்கத்தினரும் ஈடுபட்டு வருவது, விஜய் அரசியல் பாதையை நோக்கி பயணிப்பதை காட்டுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in