“மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெல்வது நிச்சயம்” - ஓபிஎஸ் நம்பிக்கை

ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப்படம்
ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: "பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது அரசியல் எதுவும் பேசவில்லை. மக்களவைத் தேர்தல் என்பது இந்திய பிரதமரை தேர்வு செய்கிற தேர்தல். அந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிதான் நிச்சயமாக வெற்றி பெறும். மூன்றாவது முறையாக நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக வருவார்" என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், அமமுகவுடன் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்திப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "நான் கட்சியில் இருந்தபோது, அநியாயமாக நடந்த பொதுக்குழுவிலும், கட்சியினுடைய வரவு செலவு கணக்குகளை என்னை வாசிக்கவிடாமல் அந்தக் கூட்டத்தை நடத்தி முடித்துவிட்டனர். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதில் இருந்து, கட்சியின் பொருளாளராக சீனிவாசன் பொறுப்பேற்றதில் இருந்து அதிமுகவின் வரவு செலவு கணக்கு விவரங்களை நாங்கள் நீதிமன்றத்தின் வாயிலாக கேட்கப்போகிறோம். அதற்கு அவர்கள் உரிய பதிலளிக்க வேண்டும்" என்றார்.

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "அரசு அறிவித்துள்ள பரிசுத் தொகுப்பு போதாது என்று ஏற்கெனவே நான் அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். பொங்கல் பரிசுத் தொகுப்புடன் மக்களுக்கு ரூ.3,000 வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறேன். அரசின் அறிவிப்பு மக்களுக்கு நிறைவானதாக இல்லை. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்" என்றார்.

பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “திருச்சி வந்த பிரதமரை சந்திப்பதற்கு வாய்ப்புக் கேட்டிருந்தேன். பிரதமரை வரவேற்கவும், வழியனுப்பவும் அனுமதி கொடுத்தனர். மனநிறைவோடு அதை நானும் செய்தேன். இந்தச் சந்திப்பில், அரசியல் எதுவும் இல்லை. அவர் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்கான வாழ்த்துக் கடிதத்தைக் கொடுத்தேன். வாய்ப்புகள் வரும்போது உறுதியாக டெல்லிக்குச் செல்வேன்.

இந்த நிமிடம் வரை பாஜகவுடன் தொடர்பில் இருக்கிறேன். மக்களவைத் தேர்தல் என்பது இந்திய பிரதமரை தேர்வு செய்கிற தேர்தல். அந்த தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிதான் நிச்சயமாக வெற்றி பெறும். மூன்றாவது முறையாக நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக வருவார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம்" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in