தனியார் முன்வந்தால் தமிழகத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் கோகுல இந்திரா பதில்
‘‘தமிழகத்தில் தனியார் முன் வந்தால், ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க அரசு உதவி செய்யும்’’ என்று கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் கோகுல இந்திரா கூறினார்.
சட்டப்பேரவையில் திங்கள் கிழமை கைத்தறி மற்றும் துணி நூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தேமுதிக உறுப்பினர் மனோகரன் பேசினார். அவருக்கும் அமைச்சர் கோகுல இந்திராவுக்கும் மோதல் ஏற்பட்டது.
அதன் விவரம்:
மனோகரன்:
தமிழகத்தில் நலிந்து கிடக்கும் நெசவுத் தொழிலை அரசு…
அமைச்சர்:
குற்றம் கூறுவதை விடுத்து, குறைகளை சுட்டிக் காட்ட வும். என்ன வேண்டும் என்று கேட் டால் அதை முதல்வர் செய்வார்.
மனோகர்:
குற்றச்சாட்டு சொல்லாமல் குறைகளை எப்படிச் சொல்ல முடியும்?
அமைச்சர்:
நமது முதல்வர் ஆட்சியில்தான் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டமான 10,000 நெசவாளர்களுக்கு ரூ.260 கோடி யில் வீடுகள் கட்டித் தரும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மனோகர்:
நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.
அமைச்சர்:
தமிழகத்தில்தான் கைத்தறி நெசவாளர்களுக்கு 100 யூனிட் வரையிலும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 500 யூனிட் வரையிலுமான மின்கட்டணத்தை அரசே ஏற்கிறது.
மேலும் நலிவு என்ற பேச்சுக்கே இப்போது இடமில்லை. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 4 இணை இலவச சீருடை வழங்கப்படுவதால், ஆண்டு முழுவதும் பெரும்பாலான நெசவாளர்களுக்கு பணி கிடைக்கிறது.
அப்போது, மனோகரன் கூறிய ஒரு வார்த்தை தொடர்பாக அமைச்சர் பதில் அளித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க் கட்சி துணைத் தலைவர் அழகா புரம் மோகன்ராஜ் மற்றும் கொறடா சந்திரகுமார் ஆகியோர் பேச வாய்ப்பு கேட்டு பேரவைத் தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை பேரவைத் தலைவர் சமாதானப்படுத்தி அமர வைத்தார்.
மனோகரன்:
தமிழகத்தில் ஜவுளிப் பூங்காக்களை உருவாக்க வேண்டும்.
அமைச்சர்:
தமிழகத்தில் ஏற்கெனவே 15 ஜவுளிப் பூங்காக் கள் உள்ளன. அவற்றை அரசு உருவாக்குவதில்லை. 50 ஏக்கர் இடமும், 25 தறிகள் கொண்ட கூடமும் இருந்தால் போதும். 51 சதவீத நிதியை அந்த தனியார் முதலீடு செய்ய வேண்டும். மத்திய அரசு 40 சதவீதமும், மாநில அரசு 9 சதவீதமும் நிதியுதவி அளிக்கும். யாரேனும் முன்வந்தால் அரசு உதவி செய்யும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
