

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்வதற்கான அரசு பேருந்துகளில் பெரும்பாலான இருக்கைகள் நிரம்பிய நிலையில், ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் தவித்து வருகின்றனர்.
சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் கல்வி, பணி, தொழில் காரணமாக வசிக்கும் பலரும்பண்டிகை, தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில், பொங்கல்பண்டிகை ஜன.15-ம் தேதி (திங்கள்)கொண்டாடப்படுகிறது. அரசு ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் 12-ம் தேதியே (வெள்ளி) புறப்படுவார்கள்.
ஆனால், அரசு பேருந்துகளில் பெரும்பாலான இருக்கைகள் தற்போதே நிரம்பி விட்டன. குறிப்பாகசென்னையில் இருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் 20 பேருந்துகளில்இருக்கைகள் நிரம்பிவிட்டன. இந்நிலையில், ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகமாக இருப்பதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து பயணிகள் சிலர் கூறியதாவது: தென்மாவட்டங்களுக்குப் பயணிக்க குறைந்தபட்சம் 9 மணி நேரமாகிறது. இதனால் படுக்கை வசதியுள்ள பேருந்துகளில் மட்டுமே பயணிக்க முடிகிறது. பெரும்பாலான அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு முடிந்துவிட்டது. இதனால் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்ய முயற்சித்தோம். ஆனால், இருக்கைக்கே குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. இது ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளதைவிட அதிகம்.
எனவே, ஊருக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. ஏற்கெனவே, புத்தாண்டையொட்டி ஊருக்குச் செல்லும்போது 3 பேருக்கு பேருந்து கட்டணம் ரூ.4,500 ஆனது. ஆனால் திரும்பி வர ரூ.6 ஆயிரத்துக்கும் மேல் செலவு ஏற்பட்டது. ஒவ்வொரு பண்டிகைக்கும் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது, "பொங்கல் பண்டிகையையொட்டி பயணிக்க இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். வரும் 8-ம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளைத் தொடர்ந்து கண்காணித்து, நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றனர்.
ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்களிடம் கேட்டபோது, "அதிக கட்டணம் வசூலிப்போருக்கு அறிவுறுத்தல் வழங்கி, கட்டணத்தை பயணிகளுக்கு திருப்பி அளிக்க ஏற்பாடு செய்கிறோம்.