

சென்னை: சுகாதாரத் துறையில் ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் உட்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர், தாய்லாந்து, அமெரிக்கா, இந்தோனேசியாவை தொடர்ந்து, உருமாற்றம் அடைந்த ஜேஎன்1 வகை கரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வகை தொற்று வேகமாக பரவுவதால் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத் துறை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கூறியதாவது:
உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சிங்கப்பூர் அரசுடன் தொடர்பில் இருந்து, கேட்டறிந்து வருகிறோம். கேரளாவில் தற்போது 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஜனவரி 1-ம் தேதி சென்னையில் 10 பேர் உட்பட தமிழகத்தில் 15 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதேநேரம் குழு பாதிப்பு எங்கும் இல்லை.
காய்ச்சல், இருமல், சளி போன்ற மிதமான பாதிப்புகளையே இந்த புதிய வகை தொற்று ஏற்படுத்துகிறது. அதுவும் 4 நாட்களில் சரியாகிவிடுகிறது. எனவே, மக்கள் அச்சமடைய வேண்டாம். இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 1.67 கோடி பேரும், தொடர் சேவையில் 4 கோடி பேரும் இதுவரை பயனடைந்துள்ளனர். தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களும் பயனடையும் வகையில் இத்திட்டத்தை விரிவுபடுத்த முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். விரைவில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்படும்.
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2,242 கிராம சுகாதார செவிலியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 1,021 மருத்துவர்கள் தேர்வு தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. அந்த வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, தற்போது கரோனா கால பணிக்கு மதிப்பெண் வழங்கும் பணி நடந்து வருகிறது. ஜனவரி 20-ம் தேதிக்கு முன்பு இப்பணி முடிக்கப்படும்.
பணி ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். 983 மருந்தாளுநர்களை தேர்வு செய்வதில் இருந்த 2 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. விரைவில் இவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். 1,200-க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்களை தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.