Published : 03 Jan 2024 05:16 AM
Last Updated : 03 Jan 2024 05:16 AM
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த 2005-ம் ஆண்டு நிறைவேற்றியது. இச்சட்டத்தின் கீழ் நடைபெறும் திட்டப் பணிகளில், ஊரகப் பகுதி உடல் உழைப்புத் தொழிலாளர் குடும்பங்கள் ஆண்டுக்கு தலா 100 நாள் வேலை பெறுவதற்கு சட்டப்பூர்வ உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை சீர்குலைத்து, முற்றாக அழித்தொழிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. நாடு முழுவதும் வலைதள இணைப்பு கிடைக்காத நிலையில், தேசிய அலைபேசி வருகைப்பதிவு முறையை (என்எம்எம்எஸ்) கட்டாயப்படுத்தி, ஏற்கெனவே லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பறித்துள்ளது.
தற்போது, பணி அட்டையுடன் ஆதார் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்கிறது. இது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும், வேலை உறுதியளிப்புச் சட்டம் மற்றும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வுகளுக்கும் எதிரானது.
டிச.30-ம் தேதிக்குள் ஆதார் அட்டையை இணைக்காத தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தொழிலாளர்களின் சட்டப்பூர்வ வேலை பெறும் உரிமை முற்றாகப் பறிக்கப்படும்.
எனவே, பணி அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பு கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப்பெற வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு மாநில அரசு வலுவான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT