Published : 03 Jan 2024 05:07 AM
Last Updated : 03 Jan 2024 05:07 AM

தமிழகத்தில் 30 இடங்களில் வருமான வரி சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

சென்னை: அரசு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் தனியார் கட்டுமான நிறுவனங்கள் உட்பட சென்னை, கோவை, ஈரோடு, நாமக்கல் உட்பட தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். குறிப்பாக கட்டுமான நிறுவனங்கள் தொடர்பான அலுவலகம், நிறுவனத்தின் உரிமையாளர் வீடுகள், அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. சோதனையின்போது பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஈரோடு: ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைசாமி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். குழந்தைசாமி, சிஎம்கே என்ற பெயரில் கட்டுமான நிறுவனம், ரியல் எஸ்டேட் மற்றும் மஞ்சள் மண்டி தொழிலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் குழந்தைசாமி வீடு, ஈரோட்டில் உள்ள அவரது அலுவலகங்கள் உள்ளிட்ட 4 இடங்களில், வருமானவரித் துறையினர் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் நேற்று காலை திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

நாமக்கல்: நாமக்கல்லை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர், சத்தியமூர்த்தி அண்ட் கோ என்ற பெயரிலான கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். நாமக்கல் முல்லை நகரில் அவரது வீடு மற்றும் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் இருக்கிறது.

இந்நிலையில், சத்தியமூர்த்தி அன்ட் கோ நிறுவனத்தின் சென்னை, நாமக்கல் ஆகியவற்றில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் ஒரேநேரத்தில் நேற்று சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது, வீடு மற்றும் அலவலகங்களில் இருந்த கணக்கு வழக்கு தொடர்பான நோட்டுகள், டைரிகள், லேப்-டாப்கள், கம்ப்யூட்டர்கள் உட்பட மேலும் சிலவற்றை வருமானவரித் துறையினர் கைப்பற்றி உள்ளனர். அந்நிறுவன உரிமையாளர்கள், பணியாளர்களிடமும் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோவை: கோவை காளப்பட்டி பகுதியில் கிரீன்ஃபீல்ட் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர்கள் ஈரோட்டை சேர்ந்த சதாசிவம் மற்றும் பாலசுப்பிரமணியம். இவர்களிடம் நேற்று வருமானவரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதேபோல் டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள எல்லன் பம்ப்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்நிறுவனத்தினருக்கு சொந்தமான இடம் தொடர்பான நடவடிக்கையில் கிரீன்ஃபீல்ட் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஈடுபட்டதாகவும் அதன்பேரில் அந்நிறுவனத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் பட்டணம் ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் உள்ள ரியல் வேல்யுலேண்ட் புரோமோட்டர்ஸ் உரிமையாளர் ராமநாதன் வீடு, சூலூர் ரூபி கார்டன் பகுதியில் உள்ள அவரது மகன் சொர்ண கார்த்திக் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வருமானவரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதேபோல், சென்னை அமைந்தகரை, கீழ்ப்பாக்கம், எழும்பூர் பகுதிகளிலும் சோதனை நடைபெற்றது.

வரிஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாகவும், சோதனை நிறைவு பெறாததால் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், சொத்து தொடர்பான தகவல்களை தற்போது வெளியிட இயலாது எனவும் வருமானவரித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x