

செங்கை/திருவள்ளூர்: செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. இத்திட்டத்தின் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை உட்பட 13 துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மக்களை எளிதாக சென்றடையும் பொருட்டு செங்கல்பட்டு மாவட்டத்தின் 10 மாநகராட்சி பகுதிகள், 4 நகராட்சி பகுதிகள், 6 பேரூராட்சி பகுதிகள் மற்றும் 22 நகர்ப்புற பகுதிகள் போன்ற 42 இடங்களில் ஜன. 3 (இன்று) முதல் 13-ம் தேதி வரை தொடர்ச்சியாக முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
அதன்படி இந்த முகாம் இன்று குரோம்பேட்டை ஆனந்தா திருமண மண்டபம், தாம்பரம் அம்பேத்கர் திருமண மண்டபம், மதுராந்தகம் அறிஞர் அண்ணா திருமண மண்டபம், வண்டலூர் கம்யூனிட்டி ஹால் வண்டலூர், நெடுங்குன்றம் பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் ஆகிய இடங்களில் தொடங்குகிறது.
இம்முகாம்களில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்பு திட்டங்களான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் தொழில் முனைவோர் பயன்பெறும் பொருட்டு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
எனவே செங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இம்முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் கேட்டுக்கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திலும் இம்முகாம்கள் நடைபெற உள்ளதாக ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.