தாமிரபரணி ஆற்றில் கலக்கும் பாதாள சாக்கடை: நெல்லை மாநகராட்சி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

படம்: மு.லெட்சுமி அருண்.
படம்: மு.லெட்சுமி அருண்.
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் பி.எம். சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

தாமிரபரணி பாதுகாப்பு இயக்க பொதுச் செயலர் அய்கோ உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்த மனு விவரம்: திருநெல்வேலி மாநகரின் பாளையங் கோட்டை தியாகராஜ நகர், மகாராஜ நகர், என்.ஜி.ஓ. காலனி, முருகன் குறிச்சி உள்ளிட்ட அனைத்து பகுதி சாக்கடையும் வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையிலுள்ள பம்பிங் ஸ்டேஷனுக்கு வந்து, அங்கிருந்து வண்ணார்பேட்டை ஆற்றுக்குள் இருக்கும் ஷம்புக்கு 2 அடி விட்டமுள்ள குழாய் மூலம் செல்கிறது. பின்னர் அங்கிருந்து ராமையன்பட்டிக்கு செல்கிறது.

சமீபத்தில் ஏற்பட்ட தாமிரபரணி வெள்ளத்தால் வண்ணார்பேட்டை ஆற்று முகப்பு முதல் உடையார்பட்டி ஆற்று முகப்பு வரை 200 மீட்டர் தூரம் குழாய் உடைந்து, குழாயை சுமந்து செல்லும் நீர்தாங்கி சுவர் பெயர்ந்து சேதம் ஆகிவிட்டது. இந்த குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்யாமல் பல லட்சம் லிட்டர் பாதாள சாக்கடை தண்ணீர் எவ்வித சமூக பொறுப் புணர்வும் இல்லாமல் ஆற்றுக்குள் விடப்பட்டுள்ளது. 5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமான தாமிரபரணி ஆற்றுக்குள் மாசு கலந்து நீர் வாழ் உயிரினங்கள், பறவைகள், விலங்கினங்கள், மனிதர்களுக்கு உடல்நல கேட்டை உருவாக்கி வருகிறது.

இது நீர் சட்டம், பொது சுகாதார சட்டம், சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப் பாட்டு விதிமுறைகளின்படி கடுங்குற்றமாகும். தண்ணீரை மாசுபடுத்தினால் அபராதம் விதிப்பது மற்றும் தண்டனை வழங்குவது உள்ளிட்டவற்றை செய்ய வேண்டிய மாநகராட்சி நிர்வாகமே ஆற்றில் பாதாள சாக்கடையை கலப்பது என்பது அதிகார அத்துமீறலாகும். ஆற்றுக்குள் கழிவுநீர் விடுவதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டப் பத்து தேவி புரத்தைச் சேர்ந்த சண்முக நாதன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது தெருவில் புதிய வடிகால் அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. “திருநெல்வேலி டவுன் குளத்தடி தெருவில் ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் இல்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in