Published : 03 Jan 2024 04:18 AM
Last Updated : 03 Jan 2024 04:18 AM
தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் 17 நாட்களுக்கு பிறகு நேற்று மீட்கப்பட்டது. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 17-ம் தேதி இரவு 8.30 மணியளவில் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் 820 பயணிகளுடன் புறப்பட்டது. இரவு 9 மணியளவில் அந்த ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்துக்கு வந்த போது பல்வேறு இடங்களில் வெள்ளத்தால் ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்திருப்பது தெரியவந்தது. தாதன்குளம் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளம் அந்தரத்தில் தொங்கியது.
இதனால் செந்தூர் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது. அதில் பயணம் செய்த 820 பயணிகளும் வெளியே வர முடியாமல் சிக்கினர். ராணுவம், தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அப்பகுதி மக்கள் உதவியுடன் 2 நாட்களுக்கு பிறகு அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தண்டவாளங்கள் சீரமைப்பு: திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டது. முதல் கட்டமாக திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரையிலான தண்டவாளங்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியிருந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலை மீட்க ரயில்வே துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். நேற்று காலை 11 மணியளவில் திருநெல்வேலியில் இருந்து டீசல் இன்ஜின் ஸ்ரீவைகுண்டத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதனை செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் ரயில்வே ஊழியர்கள் பொருத்தினர்.
பெட்டிகளில் ஆய்வு: தொடர்ந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள 22 பெட்டிகளின் தற்போதைய நிலை குறித்தும், பெட்டிக்குள் யாரும் இருக்கிறார்களா என்பது குறித்தும் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் மதியம் 1.30 மணியளவில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து டீசல் இன்ஜின் மூலம் மீட்கப்பட்டது.
இந்த ரயில் திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு முழுமையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே பயணிகளுடன் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில்வே தண்டவாளத்தில் ஆழ்வார் திரு நகரி பகுதியில் சேதமடைந்த தண்டவாள பகுதிகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அனைத்து பகுதிகளிலும் தண்டவாளம் முழுமையாக சீரமைக்கப்பட்டு உரிய சோதனைகளுக்கு பின்னரே திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே ஜனவரி 5-ம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே ஏற்கெனவே அறிவித்திருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT