திருச்சியில் பிரதமர் மோடி... வட மாநிலங்களில் லாரி ஸ்டிரைக்... | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.2, 2024

திருச்சியில் பிரதமர் மோடி... வட மாநிலங்களில் லாரி ஸ்டிரைக்... | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.2, 2024
Updated on
2 min read

“தமிழகத்துக்கு உறுதுணையாக இருக்கிறது மத்திய அரசு” - பிரதமர் மோடி: திருச்சி விமான நிலையத்தில் இரண்டாவது முனையம் ரூ.1112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடந்தது. புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பேசுகையில், "இந்த ஆண்டில் எனது முதல் நிகழ்ச்சியே தமிழகத்தில் நடப்பதை பாக்கியமாக கருதுகிறேன். தமிழக மக்களுக்காக ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை கொண்டுவந்துள்ளோம். இந்தத் திட்டங்களால் தமிழகம் மேலும் வளர்ச்சியடையும். மேலும், துவங்கப்பட்ட திட்டங்களால் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும்.

அண்மையில் கனமழையால் உயிரிழப்பும், உடமைகள் இழப்பும் அதிகம் ஏற்பட்டன. இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசு தமிழகத்துக்கு உறுதுணையாக இருந்து வருகிறது” என்று கூறினார்.

பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் விடுத்த கோரிக்கை: "கடந்த மாதம் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அந்த மாவட்டங்களின் பொது உட்கட்டமைப்புகள் பெருத்த சேதம் அடைந்திருக்கின்றன. மக்களின் வாழ்வாதாரமும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அவற்றை கடுமையான இயற்கை பேரிடர் என்று அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழகத்துக்கு உரிய நிவாரண நிதியை வழங்க, தமிழக மக்கள் சார்பாக நான் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

“உயர் கல்வியின் பூங்காவாக திகழும் தமிழ்நாடு”: பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், “உயர்கல்வியின் பூங்காவாக தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களும், தமிழ்நாடும் திகழ்கிறது. கல்வியில் சமூக நீதியையும், புதுமைகளையும் புகுத்துவதே பல்கலைக்கழகங்களின் நோக்கமாக இருக்க வேண்டும். அத்தகைய பல்கலைக்கழகங்களுக்கே சிறப்பான எதிர்காலம் உண்டு" என்று தெரிவித்தார்.

முன்னதாக, “புதியதோர் உலகு செய்வோம் என்ற பாரதிதாசன் கூற்றுப்படி, 2047-ஐ நோக்கி பயணிப்போம்” என்று பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜாமீன் விவகாரம்: சேலத்தில் கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சேலம் மாஜிஸ்திரேட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“துரோகம் இழைக்கிறது திமுக அரசு” - சீமான்: "கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டு நிலுவையிலுள்ள அகவிலைப்படி உயர்வைக் கணக்கிட்டு முழுமையாக வழங்குவோம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்றெல்லாம் வாக்குறுதிகளை அளித்த திமுக, தற்போது அவற்றை நிறைவேற்றாமல் ஏமாற்றுவதென்பது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இழைக்கப்படுகின்ற பச்சைத் துரோகமாகும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

“புல்டோசர் எங்கே?” - யோகி அரசுக்கு மஹுவா கேள்வி: வாராணசி ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசை விமர்சித்துள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா, "இந்த முறை புல்டோசரை இயக்க ஏன் இவ்வளவு தாமதம்?" என்று கேள்வியுடன் சாடியுள்ளார்.

முன்னதாக, வாராணசியில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாஜக ஐடி நிர்வாகிகள் என்று கூறப்படும் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு விவகாரம் - அவகாசம் கோரும் காங்கிரஸ்: வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு குறித்த இண்டியா கூட்டணியின் கருத்தைத் தெரிவிக்க கால அவகாசம் கோரி, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கடிதம் எழுதியுள்ளார்.

லாரி ஓட்டுநர்கள் ஸ்டிரைக்: ஸ்தம்பித்த வட மாநிலங்கள்: வாகன விபத்தை ஏற்படுத்துவோருக்கு கடுமையான தண்டனைகளை வழங்கும் விதமாக குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து, வட மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை போராட்டம் தீவிரமடைந்தது. வட மாநிலங்களில் பரவலாக பல நகரங்களிலும் பெட்ரோல், டீசல் வாங்க கூட்டம் குவிந்த வண்ணம் இருந்தது. லாரி வரத்து இல்லாததால் சில பங்க்குகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடும் நிலவுகிறது.

பழைய குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்கும் விதமாக மத்திய அரசு புதிதாக மூன்று குற்றவியல் சட்டங்களைக் கொண்டு வந்தது. அதில், சாலை விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.7 லட்சம் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியே லாரி ஓட்டுநர்கள் பல மாநிலங்களில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸில் இணைகிறார் ஒய்.எஸ்.ஷர்மிளா: ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் நிறுவனத் தலைவரும், ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா வரும் ஜனவரி 4-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா தேர்தலின் ஷர்மிளா காங்கிரஸுக்கு ஆதரவளித்தார். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனது வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் விமான நிலையத்தில் விமானங்கள் மோதி தீ விபத்து: ஜப்பானில் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் செவ்வாய்க்கிழமை கடலோர காவல்படை விமானம் மீது ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மோதியதில் பயங்கர தீ விபத்துக்கு ஏற்பட்டது. இதில், 5 பேர் உயிரிழந்தனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in