மவுலிவாக்கம் கட்டிட விபத்து: சிபிஐ விசாரணை கோரிய வழக்கை முடித்து வைக்கக் கோரும் முதல்வர் ஸ்டாலின் தரப்பு

மவுலிவாக்கம் கட்டிட விபத்து: சிபிஐ விசாரணை கோரிய வழக்கை முடித்து வைக்கக் கோரும் முதல்வர் ஸ்டாலின் தரப்பு
Updated on
1 min read

சென்னை: கடந்த 2014-ம் ஆண்டு மவுலிவாக்கத்தில் நடந்த கட்டிட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த வழக்கை முடித்து வைக்க கோர இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கம் எனுமிடத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம், 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 61 பேர் பலியாகினர். ஏராளமானவர்கள் படுகாயமடைந்தனர். அருகில் இருந்த மற்றொரு 11 மாடி கட்டிடம், 2014 நவம்பர் மாதம் இடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும், நீதிபதி ரகுபதி தலைமையில் ஒருநபர் ஆணையத்தையும் அமைத்து உத்தரவிட்டிருந்தார்.

சிறப்பு புலனாய்வு குழு விசாரணை திருப்தியளிக்கும் வகையில் இல்லை. எனவே, இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அப்போதைய எதிர்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், உண்மை குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இறுதியாக கடந்த 2017-ம் ஆண்டு விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, ஏழு ஆண்டுகளுக்குப் பின், சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வர் ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், "இந்த வழக்கில் ஏற்கெனவே ஆஜரான வழக்கறிஞருக்கு பதிலாக ஆஜராக ஏதுவாக வக்காலத்து மனு தாக்கல் செய்ய இருப்பதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “மாநில அரசுக்கு எதிராக முதல்வர் வழக்கு தொடர முடியுமா? இந்த வழக்கை விசாரிக்க வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு, "எதிர்க்கட்சி என்ற முறையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வக்காலத்து தாக்கல் செய்தால்தான் தங்கள் தரப்பு கருத்தை முன்வைக்க முடியும். இந்த வழக்கை முடித்து வைக்க கோர இருக்கிறோம்” என்று முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in