

மதுரை: மதுரை மாநகராட்சியில் மழைநீர் வடிந்து செல்வதற்காக கிருதுமால் கால்வாய், பனகல் ரோடு கால்வாய், அவனியாபுரம் கால்வாய், சிந்தாமணி கால்வாய், அனுப்பானடி கால்வாய் உட்பட 13 கால்வாய்கள் உள்ளன. இந்த கால்வாய்கள் 44.23 கி.மீ. தூரம் செல்கின்றன. மேலும், 80-க்கும் மேற்பட்ட வாய்க்கால்களும் உள்ளன. இதில், கிருதுமால் நதி, சிந்தாமணி மழைநீர் கால்வாய்கள் முக்கியமானது.
கிருதுமால் நதி மதுரை அருகே துவரிமான் அருகே இருந்து தொடங்கி 25 கி.மீ. வரை சென்று, கடந்த காலத்தில், மதுரையின் முக்கிய நீர் பாசன கால்வாயாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு, பாசன நிலங்கள் அனைத்தும், குடியிருப்புகளாக மாறவே, மழைநீர் கால்வாயாக சுருங்கியது. மாநகரப் பகுதியில் மழை பெய்தால், இந்த கால்வாய் வழியாக புறநகர் நீர்நிலைகளுக்கு சென்று விடும். அதன் பிறகு இந்த கால்வாயும் பராமரிப்பு இல்லாமல் ஆக்கிரமிப்புகள் அதிகமாகி தற்போது கழிவு நீர் கால்வாயாகவும், மதுரை மக்கள் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டும் குப்பை தொட்டியாகவும் மாறியுள்ளது.
அதுபோல், சிந்தாமணி கால்வாயும் நகரின் பெரும் நீர் கடத்தும் வழித் தடமாக இருந்தது. தற்போது இந்த கால்வாயும் முழு ஆக்கிரமிப்பும், தூர்வாரப்படாமல் நீர் கடத்தும் தன்மையையும் இழந்து விட்டது. இதுபோல் நகரின் பிற மழைநீர் கால்வாய்களும் முழுமையாக தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. அதனால், தற்போது மதுரை மாநகராட்சிப் பகுதியில் மழை பெய்தாலே மழைநீர் இந்த மழைநீர் கால்வாய்கள், வாய்க் கால்களில் தண்ணீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே குடியிருப்புகளில் புகுந்து தேங்கிவிடுகிறது.
இந்நிலையில், மதுரை மாநகராட்சியின் பிரதான 13 மழைநீர் கால்வாய்களை தூர்வார முடிவு செய்து, அதற்கான திட்டமதிப்பீடு தயார் செய்து அரசுக்கு கருத்துரு அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அரசு நிதி ஒதுக்கினாலும் மாநகராட்சி இந்த மழைநீர் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளால் அதனை அகற்ற தூர்வார முடியுமா என கண்கலங்கி கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "13 மழைநீர் கால்வாய்களில் கிருமதுமால் நதி கால்வாயும், சிந்தாமணி கால்வாயும் மட்டுமே தற்போது ஒரளவு உள்ளன. மற்ற மழைநீர் கால்வாய்கள் முழுமையாக இல்லை. மழைநீர் கால்வாய்களை தூர்வார முடிவு செய்ததால் ஓர் உதவி செயற்பொறியாளர் தலைமையில் 2 உதவிப் பொறியாளர்கள் அடங்கிய குழுவை அமைத்து, இந்த கால்வாய்களை சர்வே செய்ய கூறினோம்.
அவர்கள் தற்போது சர்வு செய்துள்ளனர். அதில், 13 மழைநீர் கால்வாய்களில் 70 சதவீதம் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கால்வாயை தூர்வார வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு அதன் வழித் தடங்களும் அழிக்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் இந்த கால்வாய்கள் முழுமையாக பராமரிப்பு இல்லாமல் கைவிடப்பட்டதோடு தனியார் ஆக்கிரமிப்பை கண்டுகொள்ளாமல் விட்டதாலே தற்போது இந்த நிலைக்கு வந்து நிற்கிறது.
தற்போது தமிழக அரசே சிறப்பு நிதி ஒதுக்கினாலும் இந்த கால்வாய்களை மீட்டு தூர்வாருவது பெரும் சவாலாக இருக்கும். ஆக்கிரமிப்புகளை எப்படி அகற்றுவது என்பது தொடர்பாக விரைவில் மேயர், அதிகாரிகள் தரப்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது" என்றனர்.