Published : 02 Jan 2024 05:38 AM
Last Updated : 02 Jan 2024 05:38 AM
சென்னை: மீன்வளத் துறையில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா தெரிவித்தார். மீனவர்களைச் சந்தித்து கலந்துரையாடுதல், மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைத்தல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு, ‘சாகர் பரிக்ரமா’ (கடல் பயணம்) என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு குஜராத் மாநிலம் மாண்டவியில் தொடங்கியது.
இத்திட்டத்தை தமிழகத்தில், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா தொடங்கி தொடங்கி வைத்ததோடு, கடல் வழியாகப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு மாநில மீனவ கிராம மக்களைச் சந்தித்து, குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். அந்த வகையில், 9-வது கட்ட கடல் பயணத்தின் நிறைவாக கடந்த அக்.9-ம் தேதி சென்னை காசிமேடு, எண்ணூர் பகுதிகளில் மீனவ மக்களைச் சந்தித்தார். இந்நிலையில், 10-வது கட்ட பயணத்தை சென்னை துறைமுகத்தில் இருந்து நேற்று தொடங்கி, ஆந்திரா மாநிலத்தின் நெல்லூருக்குப் புறப்பட்டுச் சென்றார்.
மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலாவுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சென்னை துறைமுக ஆணையத் தலைவர் சுனில் பாலிவால், துணை தலைவர் எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
முன்னதாக மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘சாகர் பரிக்ரமா’ திட்டத்தின்கீழ், கடல் மார்க்கமாக மீனவர்களைச் சந்தித்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டு வருகிறோம்.
அதன்படி, தமிழகக் கடலோரப் பகுதி மீனவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தோம். அடுத்து, ஆந்திரா செல்ல உள்ளோம். மீன்வளத் துறையில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: மீன் வளத்துறைக்காக தனியாக ஒரு துறையை மத்தியஅரசு 2019-ம் ஆண்டு தொடங்கியது.இத்துறைக்கு 10 ஆண்டுகளில்ரூ.38,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், உலகிலேயே இறால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்திலும், கடல்சார்பொருட்கள் ஏற்றுமதியில் 4-வதுஇடத்திலும் உள்ளது. மத்திய அரசு கொடுக்கும் ஊக்கத்தால் இந்த துறை இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT