நடப்பாண்டில் 14 ராக்கெட்கள் செலுத்த இலக்கு: இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

நடப்பாண்டில் 14 ராக்கெட்கள் செலுத்த இலக்கு: இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
Updated on
1 min read

சென்னை: நடப்பாண்டில் 12 முதல் 14 வரையிலான ராக்கெட் ஏவுதல் திட்டங்களை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் திட்டம் வெற்றி பெற்றபின் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதிய ஆண்டில் சிறப்பான வெற்றியுடன் இஸ்ரோ பயணத்தை தொடங்கியுள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை முயற்சி கடந்த ஆண்டு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நிகழாண்டில் குறைந்தது 2 சோதனை திட்டங்களை முன்னெடுக்க முடிவு செய்துள்ளோம்.

இதுதவிர நடப்பாண்டில் 12 முதல் 14 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுவதற்கு திட்டமிட்டுள்ளோம். இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் மற்றும் இஸ்ரோ நாசா ஒருங்கிணைப்பில் உருவான ரேடார் செயற்கைக்கோள்கள் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் அனுப்பப்பட உள்ளன. மேலும், சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா செயற்கைக்கோள் திட்டமிட்டபடி சீரான வேகத்தில் பயணித்து வருகிறது. எல்-1 புள்ளியை மையமாகக் கொண்ட சுற்றுப்பாதையை வரும் ஜனவரி 6-ம் தேதி சென்றடையும். அதன்பின் அடுத்தகட்ட ஆய்வுகளை விண்கலம் மேற்கொள்ளும்.

அதேபோல், பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இறுதிப் பகுதியான பிஎஸ்-4 இயந்திரத்தில் மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட சிறிய சாதனம் உட்பட 10 ஆய்வுக் கருவிகள் இடம் பெற்றுள்ளன. இத்தகைய முயற்சிகள் பாராட்டத்தக்கவை.

இந்த நேரத்தில் புதிய நிறுவனம், தொழில் முனைவோர், கல்வி மையங்கள், மாணவர்கள் உட்பட நாட்டில் உள்ள அனைவரும் தங்களது புதிய முயற்சியால் உருவாக்கப்பட்ட ஆய்வுக் கருவிகளை பிஎஸ்எல்வி உடன் இணைத்து அனுப்ப அழைப்புவிடுக்கிறேன்.

மேலும், பிஎஸ்-4 இயந்திரத்தை 350 கி.மீட்டருக்கு கீழான சுற்றுப்பாதைக்கு கொண்டு வரும்போது விண்வெளி கழிவுகளை ஏற்படுத்தாமல் இருக்க முடியும். குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் அடல் டிங்கரிங் அறிவியல் ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி, மண்ணச்சநல்லூர் அரசினர் மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆய்வகம் மூலமாக மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

அதன் ஒருபகுதியாக பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் ஏவுதலைப் பார்வையிட மாணவிகள் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இந்நிகழ்வு பெரிதும் பயனுள்ளதாக இருந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in