Published : 02 Jan 2024 05:45 AM
Last Updated : 02 Jan 2024 05:45 AM
சென்னை: நெடுஞ்சாலைத் துறைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: பேரவையில் மானியக் கோரிக்கையின்போது பேசிய பொதுப்பணித் துறை அமைச்சர், ‘‘ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளுக்கு சொந்தமான 10 ஆயிரம் கி.மீ. சாலைகளை, மாவட்ட சாலைகள் தரத்துக்கு உயர்த்தப்படும்’’ என்றார்.தொடர்ந்து, ஊரக வளர்ச்சித் துறை 3,435.17 கி.மீ. நீளமுள்ள 1,535 ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சியின் கீழ் வரும் சாலைகளை தரம் உயர்த்துவதற்காக நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைத்தது.
தொடர்ந்து கடந்த 2021-22-ம் நிதியாண்டில் 2,006.97 கி.மீ. நீளமுள்ள 877 சாலைகளை தரம் உயர்த்த நிர்வாக ஒப்புதல் வழங்கி, கடந்த மே மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மேலும், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 670.09 கி.மீ. தொலைவுள்ள மேலும் 332 சாலைகள் தரம் உயர்த்துவதற்காக நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. மொத்தம் 1,393.85 கி.மீ. தொலைவுள்ள 332 சாலைகளை ரூ.1,563 கோடியில் தரம் உயர்த்துவது குறித்த பரிந்துரையை தமிழக அரசுக்கு நபார்டு தலைமைப் பொறியாளர் அனுப்பினார். இந்தப் பணியை நபார்டு வங்கியின் நிதியுதவியின் கீழ் மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து, நபார்டு வங்கியின் நிதி ஒதுக்குவதற்கான குழுக் கூட்டத்தில் 779.61 கி.மீ. நீளமுள்ள 393 சாலைகளை, மாநில நிதி ரூ.175.60 கோடி பங்களிப்புடன் ரூ.878 கோடியில் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்தப் பணிகளை மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் அளிக்கும்படி நபார்டு தலைமைப் பொறியாளர், தமிழக அரசை கேட்டுக் கொண்டார்.
இதை ஏற்ற தமிழக அரசு, 393 ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி சாலைகளை தரம் உயர்த்த ரூ.878 கோடி நிதியை ஒதுக்கி நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT