வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி
Updated on
1 min read

நாகப்பட்டினம்: ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை யொட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்றது.

பேராலய வளாகத்தில உள்ளபுனித சேவியர் திடலில், புத்தாண்டு சிறப்பு கூட்டுத் திருப்பலியை தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் எல்.சகாயராஜ் அடிகளார் நிறைவேற்றி வைத்தார். பேராலய அதிபர் சி.இருதயராஜ் அடிகளார், பங்குத் தந்தை அற்புதராஜ் அடிகளார், பொருளாளர் வீ.உலகநாதன் அடிகளார், உதவி பங்குத் தந்தைகள் டேவிட் தனராஜ், ஆண்டோ ஜேசுராஜ் ஆகியோர் வழிபாடுகளை மேற்கொண்டனர்.

நள்ளிரவு 12.01 மணிக்கு 2024-ம் ஆண்டு பிறப்பு குறித்துஅறிவிக்கப்பட்டபோது, பேராலயத்தில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. புதிய ஆண்டை வரவேற்கும் வகையில் வாணவேடிக்கைகள் நடைபெற்றன. பின்னர், பவனியாக எடுத்து வரப்பட்ட விவிலியம், மறைமாவட்ட ஆயரிடம் அளிக்கப்பட்டது. அதை பெற்றுக்கொண்ட மறைமாவட்ட ஆயர், விவிலியத்தை பொதுமக்களிடம் உயர்த்தி காட்டினார். தொடர்ந்து, ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

முன்னதாக, தஞ்சாவூர் மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் அடிகளார், பேராலய அதிபர் இருதயராஜ் அடிகளார் ஆகியோருக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

புத்தாண்டு பிறப்பையொட்டி, வேளாங்கண்ணி பேராலயம், உப கோயில்கள், வளாகப் பகுதிகள் மற்றும் அலங்கார வளைவுகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in