Published : 02 Jan 2024 09:37 AM
Last Updated : 02 Jan 2024 09:37 AM

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

திருச்சி: திருச்சி அரியமங்கலத்தில் வீட்டின் மேற்கூரை நேற்று இடிந்து விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் காந்தி நகர் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்து (48). இவரது தாய் சாந்தி( 60), மனைவி விஜயலட்சுமி (45), மகள்கள் ஹரிணி (12), பிரதீபா (11). மகள்கள் இருவரும் தனியார் பள்ளியில் படித்து வந்தனர். மாரிமுத்து தனது சகோதரி வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் சென்னைக்கு சென்றிருந்தார். மாரிமுத்துவின் தாய் சாந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மனைவி மற்றும் மகள்களை வீட்டிலேயே விட்டுவிட்டு அவர் சென்னை சென்றார். நேற்று முன்தினம் இரவு சாந்தி, விஜயலட்சுமி, ஹரிணி, பிரதீபா ஆகிய நால்வரும் ஹாலில் உறங்கியுள்ளனர்.

நேற்று காலை மாரிமுத்து வீட்டின் அருகேயுள்ள மாடி வீட்டில் வசிக்கும் விஜயலட்சுமி, மொட்டை மாடியில் துணி காயவைக்கச் சென்றபோது, மாரிமுத்து வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து திரண்ட அப்பகுதி மக்கள் வீட்டின் கதவைத் திறக்க முயன்றனர். ஆனால், அவர்களால் கதவைத் திறக்க முடியவில்லை.

இடிபாடுகளில் சிக்கி... பின்னர் அங்கு வந்த அரியமங்கலம் போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஹரிணி, பிரதீபா, விஜயலட்சுமி, சாந்தி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர், நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன. விபத்து குறித்து அரியமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மாரிமுத்துவின் வீடு 1972-ல் சுண்ணாம்புக் கலவையால் கட்டப்பட்ட பழமையான கட்டிடமாகும். வீடு சேதமடைந்து இருந்த நிலையில், ஹாலின் மேற்கூரை முழுவதும் நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது விசாரணையில் தெரியவந்தது. புத்தாண்டு தினத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x