Published : 02 Jan 2024 04:00 AM
Last Updated : 02 Jan 2024 04:00 AM
ஈரோடு: திருப்பணி செய்வதாகக் கூறி தமிழக கோயில்களின் தொன்மையை அழித்து வருகின்றனர் என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்க வேல் தெரிவித்தார்.
ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ”ஆன்மிகம் வளர்ந்தால் குற்றங்கள் குறையும். வீடுகளில் அமைதி ஏற்படும். தமிழகத்தில் உள்ள சைவ, வைணவ கோயில்களின் பழங்கால சொத்துகள் மூலம் ரூ.28 கோடி வருமானம் வருகிறது. இதில் ஒரு கோடி ரூபாயை இந்து சமய அறநிலையத் துறை எடுத்துக் கொண்டு மீதி பணத்தை திருப்பி கோயிலுக்கு வழங்க வேண்டும்.
கோயில் பணிகளைச் செய்யும் அர்ச்சகர்களைக் காப்பாற்றவில்லை என்றால், கோயில்கள் காலியாகி விடும். இன்னும் 15 வருடத்தில், 26 ஆயிரம் கோயில்களில் அர்ச்சகர்கள் இருக்கமாட்டார்கள். அர்ச்சகர்களை காப்பாற்ற வேண்டுமானால், அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும்.12 ஆயிரம் அர்ச்சகர்களுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் கூட சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள்ளது. ஆனால், கோயிலுக்குச் சொந்தமான, 22 ஆயிரத்து 600 ஏக்கர் காலி இடத்திற்கு, கடந்த 8 மாதத்தில் மட்டும் வாடகை பாக்கி ரூ.151 கோடி உள்ளது.
பழமையான தொன்மையான 5 ஆயிரம் கோயில்களை புதுப்பிப்பதாக, திருப்பணி ( குட முழுக்கு ) செய்ததாக கூறுகின்றனர். திருப்பணி என்ற பெயரில் பழமையான கல்வெட்டு களையும், தொன்மையையும் அழித்து வருகின்றனர். கோயில்களை இந்து சமய அறநிலையத் துறை புதுப்பிக்கக் கூடாது. தொல்லியல் துறை தான் புதுப்பிக்க வேண்டும். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் நேர்மையான அதிகாரிகளை பணி அமர்த்தி, அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் உள்ள சிலைகளை மீட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT