

சென்னை: ஆங்கில புத்தாண்டையொட்டி, கோயில்கள், தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமானோர் பங்கேற்றனர். ஆங்கில புத்தாண்டு நேற்று வெகு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு குடியிருப்பு வளாகங்கள், பொது இடங்களில் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் புத்தாண்டைபொதுமக்கள் கொண்டாடினர். பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு முதலேபல கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில் உள்ள அனைத்து கோயில்களிலும் நேற்று அதிகாலை முதல் நடைதிறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. குறிப்பாக, வடபழனி முருகன்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. பின்னர், வடபழனி ஆண்டவருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்துசுவாமி தரிசனம் செய்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கபாலீஸ்வரர், கற்பகாம்பாளை வழிபட்டனர்.
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி, தியாகராய நகர் திருப்பதி தேவஸ்தானம், பத்மாவதி தாயார், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், திருவொற்றியூர் வடிவுடையம்மன் உட்பட பல்வேறு கோயில்களிலும் நேற்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சாந்தோம் பேராலயத்தில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு ஆராதனையும், திருப்பலியும் நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதேபோல, பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயம், மயிலாப்பூர் லஸ் சர்ச், ராயப்பேட்டை காணிக்கை அன்னை, பிராட்வே புனித அந்தோணியார், எழும்பூர் தூய இருதய ஆண்டவர், புதுப்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம்உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் புத்தாண்டு வழிபாடும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றன.