

சென்னை: சென்னையில் மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் புறநகர் மின்சார ரயில்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. சென்னை கடற்கர - தாம்பரம்செங்கல்பட்டு, சென்ட்ரல் - அரக்கோணம், கடற்கரை- வேளச்சேரி உட்பட பல்வேறு வழித்தடங்களில் மின்சா ரரயில்கள் இயக்கப்படுகின்றன. தினசரி லட்சக்கணக்கான மக்கள் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில், சென்னை கடற்கரை- வேளச்சேரி வழித்தடம், பறக்கும் ரயில் வழித்தடம் என்ற பெயரில் இயங்குகிறது.
சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை ஏற்று நடத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், ரயில் இயக்கம்முதல் வாகன நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் கையகப்படுத்தி மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, பறக்கும் ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்து, மெட்ரோ ரயில் நிலையம்போல மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பறக்கும் ரயில் தடத்தில் உள்ள நிலையங்களை எப்படி மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தொடங்கியுள்ளது.
தமிழக அரசுக்கும் தெற்கு ரயில்வேக்கும் இடையே இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாக வேண்டியிருக்கும் நிலையில், அதை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பார்ப்பதற்கான ஆயத்தப் பணிகள் ரயில் நிலையங்களில் தொடங்கியுள்ளன.
மேம்பாடு குறித்து ஆய்வு: இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பறக்கும் ரயில் நிலையங்களை எவ்வாறு மேம்படுத்தலாம் மற்றும் என்னென்ன வசதிகளைச் சேர்க்கவேண்டும் என்பதை அறியும்முயற்சியில் ஆய்வு தொடங்கியுள்ளது. அனுமதி எப்போது கிடைக்கும் என்பதை பொருத்து,அவற்றின் நிலையத்தை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.
திருமயிலை மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய 2 நிலையங்களை மாதிரியாக ஆய்வு மேற்கொண்டோம். மேலும் ஒரு நிறுவனத்தை நியமித்து, ஓர் ஆய்வை மேற்கொண்டு, எப்படி மேம்படுத்துவது என்பது குறித்து மதிப்பீடு செய்யதிட்டமிட்டுள்ளோம். நிலையங்களை மேம்படுத்த வேண்டும்.
நாங்கள் ஏஜென்சிக்கு வழிகாட்டுதல்களை வழங்கிய பிறகு, ஒவ்வொரு நிலையத்தையும் எவ்வாறு சிறப்பாக உருவாக்குவது என்பதை அவர்கள் முடிவு செய்வர். இந்த நிலையங்களை மெட்ரோ ரயில் நிறுவனம் தரத்துக்கு கொண்டு வருவதே யோசனை.
மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்றப்பிறகு, நிலையத்தை மேம்படுத்தும் பணி குறைந்தது ஒரு ஆண்டாவது ஆகும்.அதுவரை, ரயில் இயக்கத்தை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளும். இவ்வாறு அவர்கள் கூறினர்.