

சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பண்ணை வீடுகள், தங்கும் விடுதிகளில் கொண்டாட்டம் களை கட்டியது. இதில், பங்கேற்க சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பொறியாளர்களான ராஜா (25) என்பவர் நண்பரான தேனாம்பேட்டையைச் சேர்ந்த தாமோதரன் (26), வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தருண், தண்டையார்பேட்டை ஹரிஹரன் ஆகியோருடன் வந்திருந்தார்.
இவர்களில் திருக்கோவிலூரைச் சேர்ந்த தாமோதரன், தேனாம்பேட்டையில் தங்கி டிசைனிங் தொடர்பாக படித்து வந்தார். மற்ற அனைவரும் சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணி செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு விட்டு, நேற்று காலை 5 மணியளவில் உத்தண்டியில் உள்ள கடற்கரைக்கு நண்பர்கள் 4 பேரும் சென்று போலீஸாரின் கட்டுப்பாடுகளை மீறி கடலில் குளித்துள்ளனர்.
அப்போது, எழுந்த ராட்சத அலையில் 4 பேரும் சிக்கினர். தருண், ஹரிஹரன் மீட்கப்பட்டுள்ள நிலையில், ராஜா, தாமோதரன் கடலில் மூழ்கினர். இருவரும் சிறிது நேரத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கினர். இதுகுறித்து கானாத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
சென்னை மற்றும் அதையொட்டியுள்ள புறநகர் மாவட்டங்களில் கடலின் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால், உத்தண்டி, நீலாங்கரை, கானாத்தூர், பாலவாக்கம் என கடந்த 3 நாட்களில் மட்டும் 9 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவற்றை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.