

தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17, 18-ம் தேதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் விவசாய பயிர்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 1.42 லட்சம் ஹெக்டேருக்கு மேல் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக முதல் கட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. மழை வெள்ளத்தால் சேதமடைந்த மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ( 2.47 ஏக்கர் ) ரூ.8,500-ம், பாசன பயிர்களுக்கு ரூ.17,500-ம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
ஆனால், இந்த நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு குறைந்த பட்சம் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேன்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஆர்.ராகவன், செயலாளர் பா.புவி ராஜ், துணைத் தலைவர் டி.சீனிவாசன், துணைச் செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் நம்பிராஜன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதியை நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதன் விவரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கன மழையின் காரணமாக கோவில்பட்டி எட்டயபுரம், லிளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கருங்குளம் ஒன்றியங்களில் உளுந்து, பாசி பயிறு, மக்காசோளம், கம்பு, மிளகாய், சின்ன வெங்காயம், மல்லி உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பயிர்கள் பாதிப்பு: அதுபோல் தாமிரபரணி பாசனப் பகுதிகளான ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆழ்வார் திருநகரி, கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் மற்றும் வாழைப் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் விளை நிலங்களில் 3 அடிக்கு மேல் மணல் திட்டு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை.
நிவாரணத் தொகையை உயர்த்தி குறைந்தபட்சம் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். 5 ஏக்கருக்கு மட்டுமே நிவாரணம் என்ற நிபந்தனை இன்றி அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்த குத்தகை விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான இழப்பீட்டுத் தொகை கிடைக்க வகை செய்ய வேண்டும்.
உடைப்பு ஏற்பட்ட அனைத்து நீர் நிலைகளையும் உடனடியாக சீரமைத்து கரைகளை பலப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு மானிய விலையில் குறுகிய கால நெல் விதைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன. மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர், கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.