

ஆற்காடு: கலவை அம்பேத்கர் சிலை உள்ள இடத்தின் அருகே பாமக கொடி கம்பம் வைத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் அங்கு திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை கூட்டுச் சாலையின் அருகே அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த சிலையின் அருகே நேற்று பாமக நிர்வாகிகள் சிலர் எந்த அனுமதியும் இன்றி அந்த கட்சியின் கொடி கம்பம் மற்றும் வன்னியர் சங்க கொடி கம்பம் அமைத்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த விசிக மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள் அம்பேத்கர் சிலை அருகே யாரோடு கட்சி கொடி கம்பம் அமைக்கக் கூடாது என அப்புறப் படுத்தியுள்ளனர்.
ஆனால், மீண்டும் பாமக-வினர் கம்பத்தை அமைத்துள்ளனர். இதனால், விசிக மற்றும் பொது மக்கள், இளைஞர்கள் திரண்டு பாமக-வினரிடம் வாக்குவாதம் செய்து கொடிக் கம்பத்தை வைக்கக் கூடாது என திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வந்த கலவை காவல் துறையினர் பாமக கொடி கம்பத்தை அகற்றினர்கள். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, அக்கட்சியின் கொடிக் கம்பம் அந்த இடத்தில் நிறுவ வேண்டும் என பாமக-வின் மாவட்டச் செயலாளர் சரவணன் தலைமையிலான கட்சியினர் கொடி கம்பத்தை சாலையில் போட்டு சாலையை மறித்து நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு பதற்றமான நிலை நிலவியது. தொடர்ந்து, கலவை காவல் நிலையம் ( பொறுப்பு ) ஆய்வாளர் சாலமோன் ராஜா தலைமையிலான காவல் துறையினர் அங்கு வந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.