

சென்னை: வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் 4 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது. அதே நேரத்தில் 20 மாவட்டங்களில் வழக்கத்தைவிட குறைவாக மழை பெய்துள்ளது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில், இதுவரை வானிலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு இரு பெரும் பேரிடர்களை நிகழ்த்தியுள்ளது. கடந்த டிச.3, 4 தேதிகளில் இடைவிடாது பெய்த மழையால் முறையே ஆவடியில் தலா 28 செமீ (மொத்தம் 56 செமீ), நுங்கம்பாக்கத்தில் 23, 24 செமீ (மொத்தம் 47 செமீ), மீனம்பாக்கத்தில் 25, 18 செமீ (மொத்தம் 43 செமீ), தாம்பரத்தில் 17, 23 செமீ (மொத்தம் 40 செமீ), செம்பரம்பாக்கத்தில் 16, 20 செமீ (மொத்தம் 36 செமீ) பதிவாகியுள்ளது. 4-ம் தேதி அதிகபட்சமாக பூந்தமல்லியில் 34 செமீ மழை பெய்தது.
தென் மாவட்டங்களில் 17-ம்தேதி கொட்டி தீர்த்த கனமழையால் 39 இடங்களில் அதிகனமழையும், 33 இடங்களில் மிக கனமழையும், 12 இடங்களில் கனமழையும்பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 செமீ, திருச்செந்தூரில் 69 செமீ, வைகுண்டத்தில் 62 செமீ, திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் 61 செமீ, மாஞ்சோலையில் 55 செமீ, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 53 செமீ, தென்காசி மாவட்டம் குண்டாறு அணையில் 51 செமீ, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 50 செமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்விரு பேரிடர்களும் தமிழக மக்களால் மறக்க முடியாத வரலாற்று பேரிடர்களாக அமைந்துவிட்டன.
கடந்த அக்.1 முதல் டிச.31-ம் தேதி வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 46 செமீ மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 44 செமீ மழை கிடைக்கும். இந்த முறை வழக்கத்தைவிட 4 சதவீதம் அதிகமாக மழை கிடைத்துள்ளது. அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 158 சதவீதம் (133 செமீ), கன்னியாகுமரி மாவட்டத்தில் 97 சதவீதம் (105 செமீ), தூத்துக்குடி மாவட்டத்தில் 84 சதவீதம் (84 செமீ) மழை பதிவாகியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் 55 சதவீதம்குறைவாக 20 செமீ, கிருஷ்ணகிரியில் 50 சதவீதம் குறைவாக 14 செமீ, பெரம்பரலூரில் 46 சதவீதம் குறைவாக 23 செமீ மழை பதிவாகியுள்ளது.
மொத்தம் 17 மாவட்டங்களில் வழக்கத்தைவிட அதிகமாகவும், நீலகிரி மாவட்டத்தில் வழக்கமானஅளவும், 20 மாவட்டங்களில் வழக்கத்தைவிட குறைவாகவும் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில் 27 சதவீதம் குறைவாகவும், காரைக்காலில் 7 சதவீதம் அதிகமாகவும் மழை பதிவாகியுள்ளது.
6 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தெற்கு அரபிக் கடலின் மத்தியப் பகுதிகளில் நிலவக்கூடும். தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.