

சென்னை: ஆளுநர் ரவி- முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு இடையில் உரசல், அதிமுக- பாஜக கூட்டணி பிளவு என அரசியல் நிகழ்வுகள் பலவற்றுக்கு கடந்த 2023-ம் ஆண்டு அச்சாரமிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் அந்த ஆண்டின் சில முக்கிய நிகழ்வுகள் நினைவு கூரப்படும். அந்த வகையில், நேற்றுடன் முடிவுற்ற 2023-ம் ஆண்டு தமிழகம் மற்றும் தேசிய அரசியலில் பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.
இண்டியா கூட்டணி உதயம்: இன்று பிறக்கும் 2024-ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கும் நிலையில், பாஜவுக்கு எதிரான நிலைப்பாடுடைய காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கின. இக்கூட்டணி சார்பில் தற்போது தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றுக்கு குழு அமைத்து, தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை, ஏற்கெனவே ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் நிகழ்த்தும் உரைகளுக்கு திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சட்டப்பேரவை ஆண்டு முதல் கூட்டத்தில், அரசு தயாரித்து அளித்த உரையில் அவர் செய்த மாற்றங்கள், அரசால் நிராகரிக்கப்பட்டு, எழுதித்தரப்பட்ட உரையே பதிவு செய்யப்பட்டது. அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிகழ்வும் நடைபெற்றது.
அதன்பின், தமிழ்நாடு என்பதை தமிழகம் என மாற்றுவதாக பேசியதும், அதனை நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் பதிவு செய்ததும் சர்ச்சைக்குள்ளானது. இதற்கு முதல்வர், அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின், தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் ஆளுநர்- அரசு இடையே பனிப்போரை அதிகப்படுத்தியது.
ஆளுநர், தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி, திருப்பியனுப்பிய நிலையில் மீண்டும் அதே மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. முன்னதாக, மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்ய வேண்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. அப்போது, மசோதாக்களை நிலுவை வைத்தது குறித்து கேள்வி எழுப்பியதுடன், ஆளுநரும்- முதல்வரும் பேசி முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதையடுத்தே, நேற்று முன்தினம் ஆளுநர் மாளிகைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியிடம், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினார்.
கைதும், தண்டனையும்ள்: ஆளுநர்- அரசு மோதல் ஒருபுறம் இருக்க, அமலாக்கத் துறையின் நடவடிக்கையும், நீதிமன்றத்தின் உத்தரவும் ஆளும் அமைச்சரவையில் சிக்கலை ஏற்படுத்தியதும் கடந்த ஆண்டில் தான். அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதுடன் தற்போது இலாகா இல்லாத அமைச்சராக புழல் சிறையில் உள்ளார்.
மற்றொருவரான க.பொன்முடி, கடந்த திமுக ஆட்சியின் போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால், அமைச்சர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்துள்ளார். இதற்கிடையில், அமலாக்கத் துறையின் அதிகாரி லஞ்ச வழக்கில் மதுரையில் கைதானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக- பாஜக மோதல்: கடந்த 2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தோல்வியடைந்ததுமே, அதிமுகவில் சிலர் பாஜகவுடனான கூட்டணிதான் காரணம் என தெரிவித்தனர். அதன்பின், இபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பினர் பிரிந்த நிலையில், பாஜக உடனான உரசல் தொடர்ந்தது. இந்நிலையில், கடந்த செப்.25-ம் தேதி பாஜகவுடன் இனி கூட்டணியில்லை என பகிரங்கமாக பழனிசாமி அறிவித்தார்.
இந்த முழக்கத்தை அவர் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பொதுக்குழு, செயற்குழுவிலும் உரக்க கூறியுள்ளார். இதனால், பாஜக தலைமையில் 3-வது அணி நாடாளுமன்ற தேர்தலின்போது உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
விஜயகாந்த் மரணம்: இதன் தொடர்ச்சியாக, தற்போது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மரணமும், தமிழக அரசின் உதவியும், இறுதி ஊர்வலத்தின்போது சென்னையை ஸ்தம்பிக்கச் செய்த மக்கள் கூட்டமும் இந்தாண்டுக்கான அரசியல் பரபரப்பு வரிசையில் இணைந்துள்ளது.