Published : 01 Jan 2024 06:20 AM
Last Updated : 01 Jan 2024 06:20 AM

தமிழக கோயில்களை நிர்வகிக்க தனி வாரியம் அமைக்க வேண்டும்: தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்தல்

திருச்சி: தமிழக கோயில்களை சிறப்பான முறையில் நிர்வகிக்க, தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மகளிரணி மற்றும் இளைஞரணி மாநாடு திருச்சியில் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.நாராயணன் அறிமுகவுரையாற்றினார். கோவில் கந்தாடை அண்ணன் சுவாமிகள் அருளாசி வழங்கினார். நடிகை கஸ்தூரி, பட்டிமன்றப் பேச்சாளர் விஜயசுந்தரி, தொழிலதிபர் சேஷாத்ரி நாதன், திரைப்படத் தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், தமிழ்நாடு மீனவர் பேரவை நிறுவனத் தலைவர் அன்பழகனார், காமராஜர் மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வரலாறு காணாத பெரும் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடர்பாடுகளை சமாளிக்க, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட மத்திய, மாநில அரசுகளுக்கு மாநாட்டில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். பொருளாதார அடிப்படையில் நலிந்தோருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்.

கேரள மாநில அரசைப்போல, முற்பட்ட சமூகங்களைச் சேர்ந்த நலிந்தோருக்கு உதவும் வகையில், தமிழக அரசு தனி நலவாரியம் ஏற்படுத்த வேண்டும்.

மத்திய அரசு நிதியுதவியுடன் நடத்தப்படும் நவோதயா பள்ளிகளை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்க வேண்டும். இதன்மூலம் கிராமப்புற மாணவ, மாணவிகளும் நீட் போன்ற தேர்வுகளில் பங்கேற்க முடியும்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், சம்ஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிப்பாடங்களை விருப்பப் பாடமாக கற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.

இந்து சமய அறநிலையத் துறையினரால் நியமிக்கப்பட உள்ள அறங்காவலர் குழு நியமனங்களில், அந்தந்த கோயில் ஸ்தலத்தார்கள், தீர்த்தகாரர்கள் மற்றும் பிராமணர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை சிறப்பான முறையில் நிர்வகித்துப் பராமரிக்க உதவும் வகையில், தன்னாட்சி உரிமை கொண்ட தனி வாரியம் அமைக்க வேண்டும். இந்த வாரியத்துக்கான வழிமுறைகள், நெறிமுறைகள், நிர்வாக அமைப்பு ஆகியவற்றைப் பரிந்துரை செய்ய, தக்க நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x