வெள்ள நிவாரணம் கோரியவர்களை புகைப்படம் எடுக்கும் பணி: நியாய விலை கடை ஊழியர்கள் தீவிரம்

வெள்ள நிவாரணம் கோரியவர்களை புகைப்படம் எடுக்கும் பணி: நியாய விலை கடை ஊழியர்கள் தீவிரம்
Updated on
1 min read

சென்னை: வெள்ள நிவாரணம் கோரி விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு முன்பு, விண்ணப்பதாரரை நிறுத்தி புகைப்படம் எடுக்கும் பணியில் வருவாய் மற்றும் நியாய விலைக் கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த டிச.3, 4-ம் தேதிகளில் வடதமிழகத்தை தாக்கிய மிக்ஜாம் புயலால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த 4 மாவட்டங்களில் சென்னையில் அனைத்துபகுதிகளிலும், மற்ற 3 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட தாலுகாகளிலும் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 24 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நிவாரணம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், வருமான வரி செலுத்துவோர், அரசு உயர் அதிகாரிகள், சர்க்கரை குடும்ப அட்டை வைத்திருப்போர் உண்மையில் பாதிக்கப்பட்டிருந்தால், பாதிப்பு விவரங்களை நியாய விலைக்கடையில் கிடைக்கும் விண்ணப்பத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

அந்த அடிப்படையில், சென்னையில் 4.90 லட்சம் பேரும், காஞ்சிபுரத்தில் 29 ஆயிரம், செங்கல்பட்டில் 14 ஆயிரம், திருவள்ளூரில் 22ஆயிரம் என 5.50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர். இந்தவிண்ணப்பங்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

தனி செயலி உருவாக்கம்: இந்நிலையில், இதற்காக தனிசெயலி ஒன்றை தமிழக அரசுஉருவாக்கியுள்ளது. இந்த செயலியில், விண்ணப்பதாரர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஆதார், வங்கிக்கணக்கு எண், தொலைபேசி எண்களை பதிவு செய்ததும், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படமும் இடம்பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, நியாய விலைக் கடைபணியாளர்கள் மற்றும் வருவாய்த் துறையினர், வீடுவீடாக சென்றுஆய்வு செய்த பிறகு, விண்ணப்பதாரர்களை அவர்களது வீடுகளுக்கு முன்புநிறுத்தி புகைப்படத்தைஎடுத்து பதிவு செய்து வருகின்றனர். இப்பணிகள் முடிந்த பின்னரே, யார் யாருக்கு நிவாரணம் கிடைக்கும் என்பது தெரியவரும் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in