Published : 01 Jan 2024 06:00 AM
Last Updated : 01 Jan 2024 06:00 AM

புத்தாண்டை வரவேற்க கடற்கரைகளில் கூட்டம் கூட்டமாக குவிந்த இளைஞர் பட்டாளம்: தீவிர கண்காணிப்பு பணியில் 18 ஆயிரம் போலீஸார்

ஆங்கில புத்தாண்டு பிறப்பை வரவேற்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரை காந்திசிலை அருகே நடந்த கொண்டாட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள். | படம்:எஸ். சத்தியசீலன் |

சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடற்கரை, நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பண்ணை வீடுகளில் குவிந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் உட்பட அனைத்துதரப்பு மக்களும் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆங்கிலப் புத்தாண்டு ‘2024’ இன்று பிறந்துள்ளது. இதையொட்டி, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு முதலே புத்தாண்டுக் கொண்டாட்டம் களைகட்டியது.

சென்னை மெரினா, பெசன்ட் நகர், பாலவாக்கம், நீலாங்கரை உட்பட சென்னையில் உள்ள முக்கியமான அனைத்து கடற்கரைகளிலும் குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இளைஞர்கள் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் சாலைகளில் உற்சாகமாக வலம் வந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு உற்சாகமாக ஒரே குரலில் ’ஹேப்பி நியூஇயர்’ என அனைவரும் உற்சாக முழக்கமிட்டனர். மேலும், கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலும் ஆங்காங்கே சிலர் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சி கோஷமிட்டனர். அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் உற்சாகம்கரை புரண்டோடியது. குறிப்பாக மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை களைகட்டியது. முன்னதாக புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வசதியாக மெரினா காமராஜர் சாலையில் சாந்தோம் தேவாலயத்தில் இருந்து போர் நினைவுச் சின்னம் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டிய விடுதிகள் மற்றும் பண்ணை விடுதிகளிலும் பல்வேறு ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகளும் நள்ளிரவில் நடைபெற்றன. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல், மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட சென்னையில் 18 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கடலில் குளிக்கவும், கடல் நீரில் இறங்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்ததால் தடையை மீறி எவரேனும் கடலுக்குள் செல்கின்றனரா என போலீஸார் உன்னிப்பாக கண்காணித்தனர். தடையை மீறியவர்களை கடற்பரப்பில் இருந்து அப்புறப்படுத்தினர்.

போலீஸ் எச்சரிக்கை: அதிவேகம், மதுபோதையில் வாகனம் ஓட்டினால் வழக்குப் பதிவு செய்யப்படுவதோடு சம்பந்தப்பட்டவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என போலீஸார் ஏற்கெனவே எச்சரித்திருந்தனர். அதன்படி, எல்லை மீறியவர்கள் மீது போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.

அதுமட்டும் அல்லாமல் சென்னையில் மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தி.நகர், அடையாறு, பரங்கிமலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர் மற்றும் கோயம்பேடு ஆகிய காவல் மாவட்டங்களில் மொத்தம் 420 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

இதுமட்டும் அல்லாமல் சென்னையில் உள்ள 100 முக்கிய கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புத்தாண்டு வாழ்த்துதெரிவிக்கிறோம் என்ற பெயரில் எல்லை மீறுபவர்களை பிடிக்க சாதாரண உடை அணிந்த ஆண் மற்றும் பெண் போலீஸாரும் கூட்டத்தோடு கூட்டமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ட்ரோன் கேமரா மூலமும் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வசதியாக போக்குவரத்திலும் பல்வேறு மாற்றங்களை போலீஸார் ஏற்கெனவே செய்திருந்தனர்.

இதேபோல் தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஒட்டுமொத்தத்தில் தமிழகம் முழுவதும் அமைதியான முறையில்ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடந்து முடிந்ததாகபோலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x